வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறித்த முதற்கட்ட பட்டியலை அமெரிக்காவின் குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தயாரித்து உள்ளனர். இப்பட்டியலில் மொத்தம் 15 லட்சம் பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் 17,940 பேர் இந்தியர்கள் ஆவார்கள். இவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களிடம் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இப்பட்டியலில் முதலிடத்தில் ஹோண்டுரஸ் உள்ளது. இந்நாட்டைசை சேர்ந்த 2,61,651 பேர் வெளியேற்றப்பட உள்ளனர். இதற்கு அடுத்த இடங்களில் கவுதமாலா, மெக்சிகோ, எல் சால்வடார் நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களின் பட்டியலில் மெக்சிகோ மற்றும் எல் சால்வடார் நாட்டைச் சேர்ந்தவர்கள் முன்னணியில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் இந்தியர்கள் உள்ளனர். நம் நாட்டை சேர்ந்த 7,25,000 பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, அமெரிக்காவில் குடியுரிமை கேட்டு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால், இவை நீண்ட காலமாக பரிசீலனையில் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக சராசரியாக 90 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று பிடிபட்டு வருகின்றனர்.நாடு கடத்துவது தொடர்பாக அமெரிக்க அரசு தயாரித்த பட்டியலில், இந்தியாவை ஒத்துழைப்பு வழங்காதவர்கள் பட்டியலில் வைத்து உள்ளது.