இணைய பகடிவதை ;  மாண்டு விடாதீர் – மீண்டு வருவீர்

ணைய பகடிவதை நாம் கேட்கும் பார்க்கும் விஷயங்களில் ஒன்றாகி விட்டது. ஆனால் நாம் எத்தனை காலத்திற்கு தான் பகடிவதையால் மரணத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி கொண்டு வர போகிறோம். இணைய பகடிவதையை கண்டு பயந்து மாண்டு விடாதீர் – மீண்டு வருவீர் என  திலகவதி ராஜு – வத்சலா  மனோகரன் ஆகியோர் தங்களின் ஆலோசனைகளை வழங்கினர்.

இணைய பகடிவதைக்கு பலியானவர்களில் நானும் ஒருத்தி என்பதை உங்களிடம் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்  என்கிறார் தொழில் முனைவரான திலகவதி. நான் ஒரு பிரபல நிறுவனத்திற்கு  நேர்முகத் தேர்விற்கு சென்றிருந்தேன். என்னுடன் என் கணவரும் வந்திருந்தார்.  அந்த நேர்முக தேர்வு முடிந்து நான் வெளியில் வந்த சில மணி நேரங்களில் என்னை குறித்த உண்மைக்கு புறம்பான பதிவுகள் வெளி வர தொடங்கின.  ஜோகூர் முதல் பினாங்கு வரை பலர் என்னை அழைத்து  அந்த பதிவு குறித்து கேட்டனர். எத்தனை பேருக்கு தான்  நான் தன்னிலை விளக்கம் வழங்குவது என்று திலகவதி மனவேதனையுடன் தெரிவித்தார்.

நான்  அந்த பதிவால் பாதிக்கப்பட்டேன் என்பதோடு என் நெருங்கிய சொந்தங்கள் பாதிக்கப்பட்டதை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை என்றே கூறலாம். ஒரு கட்டத்தில் நானும் தவறான முடிவை தேர்வு செய்தேன். ஆனால் என் குடும்பத்தாரின் ஆதரவு இன்று நான் உங்கள் முன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.  இணைய பகடிவதையால் நீங்கள் பாதிக்கப்பட்டு நீங்கள் தவறான முடிவை எடுத்தால் அது உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் சோகம் என்பதனை நீங்கள் ஒரு கணம் யோசித்து பாருங்களேன்.

பிரச்சினைகள் நம்மை நோக்கி வந்து கொண்டே தான் இருக்கும். குறிப்பாக இணைய பகடிவதை போன்றவற்றை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் நம்மை அதிலிருந்து தற்காத்து கொள்ளலாம். பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது தளர்ந்து விடாதீர்கள். துணிந்து நின்று இணைய பகடிவதையில் இருந்து மீண்டு வாருங்கள் என்கிறார் திலகவதி.

இதற்கிடையே நம்முடன் உரையாற்றிய வன்முறைக்கு எதிராக ஆலோசனைகளை வழங்கி வரும்  தொழில் முனைவரும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான ஆலோசகருமான வத்சலா,  இணைய பகடிவதை தடுக்கப்பட வேண்டியது என்றும் அரசாங்கம் இதனை தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.  பகடிவதை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால் ஆண் – பெண் என்ற பாலினம் அல்லது அதிகாரம் இவை இரண்டுமே முக்கிய காரணிகளாக இருந்து வருகிறது.

இணைய பகடிவதையால் ஆண் – பெண் இருவருமே பாதிக்கப்படுகின்றனர். ஆனால் விகிதாசாரம் என்று எடுத்து கொண்டால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதனை யாரும் மறுக்க முடியாது.   இணைய பகடிவதையால் பாதிக்கப்படும் பெண்கள் தங்களிம் மன தைரியத்தை இழக்கின்றனர்.  அடுத்ததாக சமுதாயத்தை நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாவதோடு குடும்பத்தாரை நினைத்து கவலைப்படுகின்றனர் என்று வத்சலா  தெரிவித்தார்.

இணைய பகடிவதைக்கு நீங்கள் ஆளாவதாக உணர்ந்தால் முதலில் உங்களுக்கு நம்பத்தகுந்த ஒருவரிடம்  உங்களின் நிலையை பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் பிரச்சினையில் சிக்கியிருக்கும்  உங்களால்  எந்த தீர்க்கமான முடிவையும் எடுக்க முடியாது என்பதனையும் நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ளுங்கள். உங்களை பகடிவதைக்கு ஆளாக்கும் யாரோ ஒருவர் நிச்சயம் எங்கோ மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் நீங்கள் ஏன் தவறான முடிவுக்கு செல்ல நினைக்கிறீர்கள்.  வாழ்க்கை வாழ்வதற்கே என்பதனை அனைத்து பெண்களும் உணர வேண்டும் என்று வத்சலா வேண்டுகோள் விடுத்தார்.

பெண்கள் வெளித்தோற்றத்திற்கு தைரியமானவர்களாக தெரிந்தாலும் அவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள். அதனால் தான் இணைய பகடிவதைக்கு பெண்களே அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.   மேலும் இணைய பகடிவதைக்கு ஆளாகி வரும் பெண்களுக்கு மிகவும் அவசியமானதில் ஆலோசனையும் ஒன்றாகும். அரசாங்கம் இணைய பகடிவதைக்கு சட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்பது எங்களின் குரலாகவும் ஒலிக்கும் என்கின்றனர் திலகவதி – வத்சலா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here