மத்தியபிரதேசத்தில் பயங்கரம்: புலி தாக்கி 2 பேர் பலி

போபால்,மத்தியபிரதேசம் உமாரியா மாவட்டத்தில் பந்தவ்கர் புலிகள் காப்பகம் உள்ளது. இதன் அருகே உள்ள குலுஹாபா என்ற கிராமத்தை சேர்ந்த கைருஹா பைகா (வயது 45) கடந்த வெள்ளிக்கிழமை தனது உறவினரின் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.ஆனால் அவர் உறவினர் வீட்டிற்கும் செல்லவில்லை, தனது வீட்டிற்கும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பைகாவை தேடினர்.

இந்நிலையில், நேற்று காலை குலுஹாபா கிராமத்தில் உள்ள ஓட்டல் அருகே மனித உடல் பாகங்கள், மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இது மாயமான பைகா என்பதை உறுதி செய்தனர். பைகாவை புலி தாக்கி கொன்றுள்ளது.இதேபோல் அம்மாநிலத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள அம்பேஜாரி கிராமத்தை சேர்ந்த 55 வயது விவசாயியான சுக்ராம் உய்கே நேற்று முன்தினம் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த புலி ஒன்று அவரை கடித்துக்கொன்றது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் புலியை அங்கிருந்து விரட்டியடித்து உயிரிழந்த சுக்ராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நாளில் 2 பேர் புலியால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here