கோலாலம்பூர்:
சிலாங்கூர் மாநிலத்தின் புதிய பொதுப் போக்குவரத்துச் சேவையான ‘ஷா ஆலம் வழித்தட’ இலகு ரயில் போக்குவரத்து 3 (LRT3) இன் சேவைகளை நேரில் கண்டறிவதற்காக, சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுதீன் இத்ரிஸ் ஷா இன்று அந்த ரயிலில் பயணம் செய்து மகிழ்ந்தார்.
சுல்தானின் இந்த ரயில் பயணத்தில் சிலாங்கூர் தெங்கு பெர்மாய்சூரி நோராஷிகின் மற்றும் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா ஆகியோரும் இணைந்திருந்தனர். பண்டார் உத்தாமா (Bandar Utama) நிலையத்திலிருந்து தொடங்கிய இவர்களின் பயணம், இறுதி நிலையமான ஜோஹான் செத்தியாவில் (Johan Setia) நிறைவடைந்தது.
பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் கிள்ளான் ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய 20 நிலையங்கள் வழியாக, காலை 10.40 மணிக்குத் தொடங்கி 11.40 மணி வரை 1 மணி நேரம் இவர்களின் பயணம் அமைந்தது.
இந்த LRT3 திட்டம் நிறைவடையும் வரை பொறுமையோடு காத்திருந்த சிலாங்கூர் மக்களுக்குச் சுல்தான் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். அத்தோடு, தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த டிராபிகானா, தெமாஸ்யா, ராஜா மூடா, புக்கிட் ராஜா மற்றும் பண்டார் பொட்டானிக் ஆகிய 5 நிலையங்களின் மறுபுனரமைப்புப் பணிகள் விரைவில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவதை தாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த மாபெரும் நவீனப் போக்குவரத்து திட்டத்திற்காக உழைத்த பிரசரானா (Prasarana) மற்றும் MRCB நிறுவனங்களின் 13,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்திற்குச் சுல்தான் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த நவீனப் போக்குவரத்துச் சேவையை மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதன் வழி எதிர்காலத்தில் நிலையான மற்றும் தரமான போக்குவரத்து கலாச்சாரத்தை உருவாக்க முடியும் என்றும் சுல்தான் அறிவுறுத்தினார்.
கடந்த ஜூன் 28-ஆம் தேதி, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த RM16.63 பில்லியன் மதிப்பிலான, 37.8 கிலோமீட்டர் நீளமுள்ள LRT3 வழித்தடத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். தற்போது இந்த இரயிலில் பொதுமக்கள் ஒரு மாத காலத்திற்கு இலவசமாகப் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.




















