பீஹார் : மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. பீகாரில் நடைபெற்ற ராஜ்கீர் ஹாக்கி மைதானத்தில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் இரு அணி வீராங்கனைகளும் கடுமையாக போராடி கோல்களை அடிக்க போராடினர். குறிப்பாக இந்த போட்டி முழுவதும் இந்திய அணி பந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு இருந்தார்கள்.
எனினும் சீன வீராங்கனைகள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதால் முதல் பாதியில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்க முடியவில்லை. இந்த சூழலில் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் இந்திய வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி நான்கு பெனால்டி கார்னரை பெற்றனர். எனினும் அந்த நான்கையும் இந்திய வீராங்கனைகளால் கோலாக மாற்ற முடியவில்லை.
இந்த தருணத்தில் தான் ஆட்டத்தின் மூன்றாவது பகுதியில் இந்திய வீராங்கனை தீபிகா தமக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்ற இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.இதனை அடுத்து பதில் கோல் அடித்து போட்டியை சமன் செய்ய சீன வீராங்கனைகள் எவ்வளவோ போராடியும், அது தோல்வியில் முடிந்தது.
இந்த சூழலில் உலகில் நம்பர் ஆறாவது அணியாக இருக்கும் சீனாவை இந்தியா தங்களது அபார ஆட்டத்தால் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பையை கைப்பற்றி இதற்கு முன்பு இந்திய அணி 2016 மற்றும் 13ஆம் ஆண்டு மகளிர் சாம்பியன் கோப்பையில் வென்று அசத்தியிருக்கிறது.