நீர்த் தேக்கம் உடைப்பு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுங்கை பூலோ மக்கள் சேவை மையம் உதவி

கோலாலம்பூர்:

திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் தாமான் ஸ்ரீ ஆலம், செளஜானா உத்தாமா பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து வழங்குமாறு சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மக்கள் சேவை மைய தன்னார்வளர்கள் பணிக்கப்பட்டுள்ளனர் என்று தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

நீர்த் தேக்கம் ஒன்று உடைப்பெடுத்ததில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. நேற்று முன் தினம் மாலை இச்சம்பவம் நிகழ்ந்தது.

இதில் 50க்கும் அதிகமான வீடுகள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டன. இதனை அடுத்து டத்தோஸ்ரீ ரமணன் உத்தரவின் பேரில் களமிறங்கிய மக்கள் சேவை மையத்தின் தன்னார்வளர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து வழங்கினர்.

தொகுதி மக்களின் நலன்காப்பதில் சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மக்கள் சேவை மையத்தின் தன்னார்வளர்கள் அதீத அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர் என்று தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துறை துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

தொகுதி மக்கள் நலன் காக்கப்படுவது எல்லாக் காலக்கட்டத்திலும் உறுதி செய்யப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது என்று தம்முடைய ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அவசர காலத்தில் களப்பணி ஆற்றி பெரும் உதவியாக இருந்த மலேசிய தீயணைப்பு, மீட்பு இலாகா மேலும் அரச மலேசிய போலீஸ் படை ஆகிய தரப்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

அதேசமயத்தில் விரைந்து உதவிக்கரம் நீட்டிய மடானி அரசாங்கத்திற்கும் டத்தோஸ்ரீ ரமணன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்கு அரசாங்க ஏஜென்சிகளும் தேவையான உதவிகளை வழங்கிவருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே நீர்த்தேக்கம் உடைப்பு குறித்து மாலை 5.15 மணியளவில் அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்பு இலாகா நடவடிக்கை பிரிவு உதவி இயக்குனர் அமாட் முக்லிஸ் மொக்தார் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. நீர்த்தேக்கம் உடைப்பெடுத்து அப்பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டாலும் உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை என்பதையும் அவர் உறுதிபடுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here