கோலாலம்பூர்:
சமூக மேம்பாட்டுத் துறையின் (KEMAS) பிரா-தஹ்ஃபிஸ் எனப்படும் மதம் சார்பான பாலர்பள்ளிகளின் கல்வித்திட்டத்திற்கு அரசாங்கம் RM20 மில்லியன் ஒதுக்கியுள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அமாட் ஜாஹிட் ஹமிடி இன்று கூறினார், மேலும் எதிர்காலத்தில் இந்த முயற்சிகளை வலுப்படுத்த RM200 மில்லியன் நிதியை ஒதுக்க உள்ளதாகவும் அவர் சொன்னார்.
ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு சமநிலையான சூழலை வளர்ப்பதற்காக மத போதனைகள் மற்றும் கல்வியை ஒருங்கிணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
“இந்த ஆண்டு இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு RM1.51 பில்லியனாக உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட RM45.49 மில்லியன் அதிகம் என்று கூறிய அவர், கேமாஸ் பிரா-தஹ்ஃபிஸ் திட்டத்திற்கும் RM20 மில்லியன் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், எனது விருப்பம் என்னவென்றால் இந்த ஒதுக்கீடு எதிர்காலத்தில் RM200 மில்லியன் பெறுவதாகும் என்றார்.
“இந்த முயற்சி ஒரு மத மற்றும் ஆன்மீக முயற்சி. உலகியல் நோக்கங்களை ஆன்மீகத்துடன் சமநிலைப்படுத்த நாம் எப்போதும் பாடுபட வேண்டும். ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி மத மற்றும் கல்வி விழுமியங்களுடன் இணைக்கப்படுவதை உறுதி செய்வதற்கான கெமாஸின் நோக்கத்தில் இந்தப் படி மிகவும் முக்கியமானது,” என்று அவர் இன்று நடைபெற்ற 2025 ‘பெமர்கசான் மஸ்யாரகத் மடானி கெமாஸ்’ நிகழ்ச்சியின் போது தனது உரையில் கூறினார்.




















