மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றுக்கு ரிபாகினா, ரடுகானு முன்னேறினர்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், மெல்போர்னில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் ‘நம்பர்-6’ வீராங்கனை கஜகஸ்தானின் ரிபாகினா, ஆஸ்திரேலியாவின் ஜோன்சை எதிர்கொண்டார். இதில் ரிபாகினா 6-1, 6-1 என நேர் செட்டில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் பிரிட்டனின் எம்மா ரடுகானு, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவா மோதினர். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற இரண்டு செட்டையும் 7-6, 7-6 என வென்ற ரடுகானு, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். உலகின் ‘நம்பர்-4’ வீராங்கனை இத்தாலியின் பாவோலினி, 6-0, 6-4 என சீனாவின் சிஜிஜா வெய்யை வீழ்த்தினார்.
மற்ற முதல் சுற்று போட்டிகளில் மடிசன் கெய்ஸ், அனிசிமோவா, நவ்வாரோ (அமெரிக்கா), கசட்கினா, ஆன்ட்ரீவா (ரஷ்யா) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில், ‘நம்பர்-5’ வீரர் ரஷ்யாவின் மெத்வெடேவ், தாய்லாந்தின் சாம்ரெஜ் மோதினர். இதில் மெத்வெடேவ், 6-2, 4-6, 3-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். ‘நம்பர்-4’ வீரர், அமெரிக்காவின் பிரிட்ஸ், 6-2, 6-0, 6-3 என்ற நேர் செட்டில் சக வீரர் புரூக்ஸ்பையை வென்றார்.
சுவிட்ச்லாந்தின் வாவ்ரின்கா, 4-6, 7-5, 5-7, 5-7 என்ற செட் கணக்கில் இத்தாலியின் சொனேகோவிடம் போராடி தோல்வியடைந்தார்.
மற்ற முதல் சுற்று போட்டிகளில் ஷபோவலோவ் (கனடா), மான்பில்ஸ் (பிரான்ஸ்), மசெட்டி, பெர்ரெட்டினி (இத்தாலி) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
போபண்ணா ‘ஷாக்’
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இத்தொடரின் ‘நம்பர்-14’ அந்தஸ்து பெற்ற இந்தியாவின் போபண்ணா, கொலம்பியாவின் நிகோலஸ் பரியன்டோஸ் ஜோடி, ஸ்பெயினின் மார்டினஸ், முனார் ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 5-7, 6-7 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தது.