2025 இல் மலேசியா ஆசியான் தலைமையை ஏற்றிருக்கும் காலக்கட்டத்தில் ஏழு அமைச்சுகளின் ஏற்பாட்டில் பினாங்கு மாநில அரசாங்கம் 13 முக்கிய கூட்டங்களை ஏற்று நடத்தும்.
அவற்றில் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் அளவிலான கூட்டங்களும் விவாதங்களும் அடங்கும் என்று மாநில துணை செயலாளர் (நிர்வாகம்) டத்தோ அப்துல் காஹார் அப்துல்லா தெரிவித்தார்.

இக்கூட்டங்களில் பாதுகாப்பு, பொருளாதாரம், முதலீடு, வாணிபம், கல்வி, இளைஞர் மேம்பாடு உட்பட ஆசியான் உறுப்பு நாடுகளுக்கிடையிலான வியூக ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
தற்காப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு, நிதி அமைச்சு, முதலீடு,வாணிபம்,தொழில்துறை அமைச்சு, உள்துறை அமைச்சு, இளைஞர், விளையாட்டு அமைச்சு, உயர் கல்வி அமைச்சு ஆகியவையே இந்த ஏற்பாட்டில் சம்பந்தப்பட்ட 7 அமைச்சுகள் ஆகும்.

மாநில அரசாங்கம் ஒருங்கிணைப்பு, போக்குவரத்து, இடங்கள் ஏற்பாடு, கலாச்சார இடங்களுக்கு வருகை ஏற்பாடு ஆகியவற்றில் முக்கிய பங்காற்றும் என்று அப்துல் காஹார் சொன்னார்.
பேராளர்களுக்கு மிகச் சிறந்த அனுபவங்களை வழங்கும் வகையில் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சுமுகமாக நடந்திடுவதை பல்வேறு தரப்புக்களுடனான அணுக்கமான ஒத்துழைப்பு உறுதி செய்யும் என்று அவர் சொன்னார்.

ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கூட்டங்களில் 102 ஆவது ஆசியான் வர்த்தக ஆலோசனை மன்ற கூட்டம், 25 ஆவது கூட்டு மன்ற கூட்டம் ஆகியவையும் அடங்கும். ஆசியான் சீனியர் அதிகாரிகள் கூட்டம் ஜுன் மாதம் நடைபெறும்.

பிறை உட்பட பினாங்கு முழுவதும் ஆசியான் போஸ்டர்கள், இலக்ட்ரோனிக் பில்போர்டுகள் வைக்கப்படும். பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து பேராளர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல்கள் வரையிலான பாதைகள் அழகிய காட்சிகள் கொண்டு அலங்கரிக்கப்படும் என்று அப்துல் காஹார் தெரிவித்தார்.





















