ஐ.நா. – வாழ்விடம் பேரவையில் தலைவர் பதவிக்கு மலேசியா போட்டி

(Editor BR.Rajan)

புத்ரா ஜெயா,

கென்யா, நைரோபியில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஐ.நா. வாழ்விடம் பொதுப் பேரவையில் தலைவர் பதவிக்கு மலேசியா போட்டியிடும் என்று வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.

ஐ.நா.வில் நடைபெறும் மனித குடியிருப்பு திட்ட பொதுப்பேரவையில் கலந்துகொள்வதற்கு நைரோபி செல்லும் மலேசியக் குழுவுக்கு ஙா கோர் மிங் தலைமை ஏற்றிருக்கிறார்.

தலைமைப் பதவிக்கு போட்டியிடுவது என்பது மலேசியாவுக்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமைகிறது. தலைமைப் பதவிக்கு மலேசியா தேர்ந்தெடுக்கப்பட்டால் 2026 – 2029 தவணைக்கு பொறுப்பேற்கும். ஐ.நா. சபையில் மொத்தம் 193 நாடுகள் உறுப்பியம் பெற்றிருக்கின்றன.

ஐ.நா. நடைமுறையின் கீழ் மனித குடியிருப்புகளையும் நிலைத்தன்மைமிக்க நகர் மையத் திட்டங்களையும் முடிவு செய்யும் உச்சபட்ச செயற்குழுவாக ஐ.நா.- வாழ்விடம் பேரவை திகழ்கிறது.

ஐ.நா. நடைமுறையின் கீழ் பிராந்திய நாடுகளுக்கிடையில் தலைமைப் பதவி சுற்று முறையில் ஏற்கப்படுகிறது. நடப்புத் தலைமைப் பொறுப்பை மெக்சிகோவைப் பிரதிநிதித்து லத்தின் அமெரிக்கா, கரிபியன் நாடுகள் ஏற்றுள்ளன.
அடுத்த தலைவர் ஆசியா பசிபிக் பிராந்தியத்திலிருந்து தேர்வு செய்யப்பட வேண்டும். இந்தப் பதவிக் காலமானது 2026 தொடங்கி 2029 வரை நான்கு ஆண்டுகள் அமலில் இருக்கும்.

நைரோபில் உள்ள ஐ.நா. – வாழ்விடம் தலைமையகத்தில் மே 29 முதல் மே 30ஆம் தேதி வரை ஐ.நா. – வாழ்விடம் பொதுப் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் நடைபெறும். அதில் புதிய தலைமைத்துவம் தேர்வு செய்யப்படும்.

மலேசியா தேர்ந் தெடுக்கப்பட்டால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அப்பதவியை ஏற்பதாக அமையும். ஆகக் கடைசியாக டான்ஸ்ரீ ஹமிடோன் அலி 2010ஆம் ஆண்டின் ஐ.நா. பொருளாதாரம், சமூக மன்றத்தின் தலைவராகச் செயலாற்றினார். அதேசமயம், மலேசியாவின் நடப்புப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 1988ஆம் ஆண்டின் ஐ.நா. கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) தலைவராக இருந்தார்.

இவருக்கு முன்னதாக 1996ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை டான்ஸ்ரீ ரஸாலி இஸ்மாயில் ஐ.நா. பொதுப் பேரவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார் என்று அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.

இம்முறை மலேசியா ஐ.நா. – வாழ்விடம் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைத்துலக அரங்கில் மலேசியாவின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தலைமைப் பதவி மலேசியாவுக்கு வழங்கப்பட்டால் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள், நகர்ப்புற புதுப்பித்தல், வீண் விரயங்களை அடியோடு தவிர்த்தல் போன்றவற்றில் மலேசியா தீவிர கவனம் செலுத்தும் என்று ஙா கோர் மிங் குறிப்பிட்டார். தலைமைப் பதவிக்கான தேர்தல் முடிவு மே 30ஆம் தேதி அறிவிக்கப்படும்.

நைரோபிக்கு வருகை மேற்கொள்ளும் மலேசிய வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் கென்யா, மெக்சிகோ, ஆஸர்பைஜன், சீனா, ஐக்கிய அரசு அமீரகம் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருவழிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here