கொல்கத்தா:
நேதாஜி குறித்த சர்ச்சை பதிவு வெளியிட்டதாக கூறி ராகுல் காந்தி மீது மேற்குவங்க போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல்காந்தி, கடந்த 23ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை செய்தார். அந்த பதிவில், ‘மாபெரும் புரட்சியாளரும், ஆசாத் ஹிந்த் ஃபாஜின் நிறுவனருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நேதாஜியின் தலைமை, தைரியம், சமூக நீதிக்கான அவரது போராட்டம், சகிப்புத்தன்மை ஆகியவை இன்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கின்றன.
இந்தியத் தாயின் வீழ்த்தப்படாத மகன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவுடன் நேதாஜியின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் நேதாஜி பிறந்த நாளான 1897 ஜனவரி 23ம் தேதி மற்றும் 1945 ஆகஸ்ட் 18ம் தேதி ஆகியன குறிப்பிடப்பட்டிருந்தன. நேதாஜியின் பிறந்த நாளில் அவரது நினைவு நாளையும் சேர்த்து குறிப்பிட்டு ராகுல்காந்தி பதிவை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பா அகில் பாரதிய இந்து மகாசபாவின் மாநில தலைவர் சந்திரசூட் கோஸ்வாமி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், தெற்கு கொல்கத்தாவின் பவானிபூர் காவல் நிலைய போலீசார் ராகுல் காந்திக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து அகில் பாரதிய இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் சந்திரசூட் கோஸ்வாமி கூறுகையில், ‘நேதாஜியைப் பற்றிய தவறான தகவல்களை காங்கிரசும், அதன் தலைவர்களும் வெளியிட்டு வருகின்றனர். நேதாஜி இறப்பு தேதியை (ஆகஸ்ட் 18,1945) ராகுல்காந்தி குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.








