நாற்காலி தகராறு கொலையில் முடிந்தது.. கோவா கடற்கரையில் பயங்கரம்

பனாஜி:சுற்றுலாவுக்கு பெயர்பெற்ற கோவா கடற்கரை மற்றும் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் இளைப்பாறி ஓய்வெடுப்பதற்கான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடில்கள் மற்றும் அதற்கு வெளியே நாற்காலிகள் போடப்பட்டிருக்கும். இவ்வாறு குடிலுக்கு முன்னால் நாற்காலிகளை போடுவது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நேற்று அரம்போல் கடற்கரையில் உள்ள ஒரு குடிலுக்கு முன்னால் போடப்பட்ட நாற்காலிகள், அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி போடப்பட்டதாக தெரிகிறது. கடற்கரையில் நிர்ணயிக்கப்பட்ட பகுதிக்கு அப்பால் நாற்காலிகள் வைப்பதை உள்ளூரைச் சேர்ந்த அமர் பண்டேகர் (வயது 39) தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், குடில் உரிமையாளர் சுரேந்தர் குமார் மற்றும் அவரது ஊழியர்கள் சேர்ந்து அமர் பண்டேகரை அடித்து உதைத்ததுடன், கூர்மையான ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அமர் பண்டேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து குடில் உரிமையாளர் சுரேந்தர் குமாரை கைது செய்தனர். அவரது ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here