நாடு முழுவதும் உள்ள உணவகங்கள் மீண்டும் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சினையை எதிர்நோக்கி இருப்பதாக உணவக உரிமையாளர்களைப் பிரதிநிதிக்கும் சங்கங்கள் முறையிட்டிருக்கின்றன. தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் ஆள்பலப் பற்றாக்குறை காரணமாக ஏற்கெனவே மூடப்பட்ட உணவகங்கள் பட்டியலில் மேலும் பல உணவகங்கள் சேர்ந்துகொள்ளும் ஆபத்து இருப்பதை அந்தச் சங்கங்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.
பிரிஸ்மா எனப்படும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜவஹர் அலி தாய்ப் கானும் பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்டத்தோ ஜே. கோவிந்தசாமியும் சில தினங்களுக்கு முன்பு நடத்திய நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நாட்டிலுள்ள உணவகங்கள எதிர்நோக்கும் தொழிலாளர் பற்றாக்குறை என்பது ஒரு புதிய பிரச்சினை அல்ல. ஏற்கெனவே கடந்த காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்ட போதெல்லாம் அதற்குத் தீர்வுகாண அரசுத் தரப்பில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சமீப காலமாக உணவகங்களில் தொழிலாளர் பற்றாக்குறை மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பது குறித்து அவர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.
அனுமதி தருக
உணவகங்கள் எதிர்நோக்கும் ஆள்பலப் பற்றாக்குறையைத் தீர்க்க அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அரசாங்கம் அனுமதி தர வேண்டும் என அவர்கள் மீண்டும் வைத்திருக்கும் கோரிக்கை நியாயமானதே. தீபகற்ப மலேசியாவில் மட்டுமன்றி சபா, சரவாக்கில் உள்ள வாழை இலை உணவகங்களும் நாசிக் கண்டார் உணவகங்களும் மற்ற உணவகங்களும் எதிர்நோக்கி வரும் ஆள்பலப் பற்றாக்குறை நாளுக்கு நாள் மோசமடைகிறது.
உள்நாட்டினரை வேலைக்கு அமர்த்தலாம் என ஏற்கெனவே அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. உணவகங்களில் உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் அரசுத் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட வேளையில் உணவகங்களில் வேலை செய்ய பெரிய அளவில் உள்நாட்டினர் ஆர்வம் தெரிவிக்கவில்லை என்பதை உணவக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டி இருப்பதை அரசாங்கம் கருத்தில்கொள்ள வேண்டும்.
இப்போது வேறு வழி இல்லை. அந்நியத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்க அரசாங்கம் அனுமதி அளித்தால்தான் உணவகங்கள் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலை தலைதூக்கி இருக்கிறது. நிபந்தனை விலகுமா?
கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி அந்நியத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில்லை என்ற முடிவை உள்துறை அமைச்சு அறிவித்திருந்தது. இதனால் உணவகத் தொழில் உட்பட பல தொழில்களில் ஆள்பலப் பற்றாக்குறை ஏற்படும் என்று ஏற்கெனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் கவலை தெரிவித்திருக்கின்றனர்.
ஆகவே பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு மாற்றுத் தொழிலாளர் எனும் ஒரு கொள்கையை மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் உணவக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். சொந்த நாடுகளுக்குத் திரும்பிவிட்ட அந்நியத் தொழிலாளர்களுக்குப் பதிலாக புதிய அந்நியத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்கும் கொள்கையை அரசாங்கம் மீண்டும் அறிமுகம் செய்தால் ஆள்பலப் பற்றாக்குறைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆகவே உணவகங்களில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் கொள்கை மறு ஆய்வு செய்யப்பட்டு அந்நியத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதற்கான நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுத்தப்படுவது குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அரசாங்கம் இந்த விஷயத்தில் விரைந்து தலையிட்டால்தான்தடுமாறிக் கொண்டிருக்கும் உணவகங்கள் இந்த இக்கட்டான நிலையில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியும் என்பதையும் உணவக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
வயது வரம்பு
அந்நியத் தொழிலாளர்களின் வயது வரம்பை 45இல் இருந்து 60ஆக உயர்த்த வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் இன்னொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது. அந்நியத் தொழிலாளர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன்தான் உள்ளனர். இவர்கள் 60 வயது வரை வேல செய்யக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர். 45 வயதைக் கடந்த பிறகும் அவர்களால் தங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடிகிறது.
இந்தக் கோரிக்கையோடு பல அடுக்கு வரி நடைமுறையை அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என அந்த இரண்டு சங்கங்களும் கோரிக்கை விடுத்திருக்கின்றன. நாட்டின் பொருளாதாரம் மீண்டும் நிலைத்தன்மையைப் பெறும் வரையிலும் ஆள்பலப் பற்றாக்குறைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் வரை இந்தப் பல அடுக்குவரி முறையை ஒத்திவைக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக அமைந்திருக்கிறது.
ஏனெனில் பல அடுக்கு வரி நடைமுறை அந்நியத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்கும் செலவினத்தை உயர்த்தும். இதனால் உணவகம் போன்ற சிறிய தொழில்துறைகள் சுமையைச் சந்திக்க நேரிடும். இது நடந்தால் உணவுகளின் விலையும் உயரக்கூடிய நிலை ஏற்படும்.
மலேசியாவில் உள்ள உணவகங்கள் ஆள்பலப் பற்றாக் குறை நெருக்கடியில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டுமானால் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பது மீதான நிபந்தனைகளை அரசாங்கம் தளர்த்துவது மட்டும்தான் ஒரே வழியாக அமைந்திருக்கிறது.
உதாரணத்திற்கு தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிவிட்ட அந்நியத் தொழிலாளர்களுக்குப் புதிய அந்நியத் தொழிலாளர்களை வேலைக்குச் சேக்கும் கொள்கையை அரசாங்கம் மீண்டும் அறிமுகம் செய்வது நல்ல பலனைத் தரும் எனடத்தோ ஜவஹர் அலி குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது சேவைத்துறையில் 2.5 மில்லியன் அந்நியத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுள் சுமார் 18 விழுக்காட்டினர் உணவகத் தொழில்துறையில் வேலை செய்வதை அறிய முடிகிறது. அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்ந்து நீடித்தால் அது உணவகத் தொழில்துறைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என டத்தோ கோவிந்தசாமி சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான கோட்டா முடக்க கப்பட்டிருப்பதாக ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். இந்தத் தடை நீக்கப்பட வேண்டும் என்பதுதான் அமைச்சர் சைஃபுடின் உணவக உரிமையாளர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. உள்துறை அமைச்சர் உரிமையாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு நிபந்தனையைத் டத்தோஸ்ரீ சைஃபுடின் தளர்த்தப் பரிசீலனை செய்வார் என எதிர்பார்க்கிறோம் என கோவிந்தசாமி குறிப்பிட்டிருக்கிறார்.
அமைச்சரின் கருத்து
இந்த நிலையில் உணவகத் தொழில்துறையில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்க்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையைப் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி நிராகரித்திருப்பது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
13ஆவது மலேசியத் திட்டத்தின் வாயிலாக குறைந்த ஆற்றல் கொண்ட அந்நியத் தொழிலாளர்களை நாடு சார்ந்திருப்பதைக் குறைக்கும் விஷயத்தில் அரசாங்கம் முனைப்புக் காட்டும் என்று ரஃபிஸி குறிபிட்டிருக்கிறார்.
மலேசியாவைச் சேர்ந்த முதலாளிகள் அந்நியத் தொழிலாளர்களை முழுக்க முழுக்கச் சார்ந்திருக்கக்கூடாது என்பதுதான் அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் சொன்னார். ஆனால் உணவகத் தொழில்துறையில் உள்நாட்டினரைச் சேர்க்க நாங்கள் தயாராகத்தான் இருக்கின்றோம். ஆனால் அவர்கள் உணவக வேலைகளைச் செய்ய ஆர்வம் காட்டாதபோது எங்களால் என்ன செய்ய முடியும் என்று பிரிமாஸ் துணைத் தலைவர் தஹிர் சனாம் குறிப்பிட்டிருக்கிறார்.
உள்நாட்டினர் வேலை செய்ய ஆர்வம் காட்டாதபோது நாங்கள் அந்நியத் தொழிலாளர்களைத்தானே சார்ந்திருக்க வேண்டும் என்று அவர் முன்வைத்திருக்கும் விவாதம் நியாயமானதே. இந்த விஷயத்தில் சரியான தீர்வு விரைந்து காணப்பட வேண்டுமே தவிர ஏதாவது காரணங்களைச் சொல்லி எங்கள் கோரிக்கைகளை நிராகரிப்பது எங்களுக்கு மீண்டும் மீண்டும் சோதனையாகத்தான் அமையும் என்பதை உணவக உரிமையாளர்கள் கவலையோடு சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
-எம்.எஸ். மலையாண்டி