சீனாவில் நிலச்சரிவு: காணாமல் போன 30 பேரை தேடி வரும் மீட்புக் குழுவினர்

சிச்சுவான்,சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சூழலில் மண்ணுக்குள் புதைந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவினால் மாயமாகியுள்ள 30க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தனது அனுதாபத்தை தெரிவித்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டு அதிகாரிகள் உடனடியாக மாயமானவர்களை தேடி மீட்குமாறு உத்தரவிட்டார். மேலும், அந்நாட்டு பிரதமர் லி கியாங் அப்பகுதியை சுற்றியுள்ள இடங்களின் புவியியல் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளுமாறும், ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு மற்றொரு பேரிடர் ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, கடந்த ஆறு மாதங்களாக மலையிலிருந்து பெரிய பாறைகள் அடிக்கடி உருண்டு வருவதை காண முடிந்தது என்று கிராமவாசிகள் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here