சொத்து தகராறு: பிரபல தொழிலதிபரை 73 முறை கத்தியால் குத்தி கொன்ற பேரன்

ஐதராபாத்,தெலுங்கானாவில் சோமஜிகுடா பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வெலமடி சந்திரசேகர ஜனார்த்தன ராவ் (வயது 86). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் வழி பேரனான ஸ்ரீகிருஷ்ணா என்பவரை வெல்ஜன் குரூப் என்ற நிறுவனத்தின் இயக்குநராக நியமித்து இருக்கிறார்.

இதன்பின்பு, மற்றொரு மகளான சரோஜினி தேவியின் மகன் கிலரு கீர்த்தி தேஜா (வயது 29) என்பவருக்கு ரூ.4 கோடி மதிப்பிலான பங்குகளை பரிமாற்றம் செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு, மகன் தேஜாவுடன் சரோஜினி தேவி, தந்தையை பார்க்க அவருடைய வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, சொத்து பற்றி வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், பரம்பரை சொத்துகளை பிரித்து கொடுப்பதில் பாரபட்ச முறையில் நடந்து கொண்டார் என கூறி ஜனார்த்தனனிடம் பேரன் தேஜா தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

அப்போது, தேநீர் எடுத்து வர சரோஜினி தேவி சமையலறைக்கு சென்று விட்டார். இந்நிலையில், வாக்குவாதம் முற்றியதில் தேஜா கத்தியை எடுத்து ஜனார்த்தன ராவை 73 முறை குத்தியுள்ளார். திரும்பி வந்து பார்த்த சரோஜினி இதனை தடுக்க முயன்றுள்ளார். அவருக்கு 4 முறை கத்திக்குத்து விழுந்துள்ளது.

இதனை பாதுகாவலர் வீர பாபு பார்த்திருக்கிறார். எனினும், அவரை தேஜா மிரட்டியதும் அமைதியாக இருந்து விட்டார். இதன்பின்னர், அந்த இடத்தில் இருந்து தேஜா தப்பியோடி விட்டார்.

தகவல் அறிந்து குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, ஜனார்த்தனன் உயிரிழந்து கிடந்துள்ளார். காயங்களுடன் கிடந்த சரோஜினியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் , தேஜாவை நேற்று கைது செய்தனர்.

இதன்பின்னர் விசாரணைக்காக அவரை காவலுக்கு எடுத்துள்ளனர். அமெரிக்காவில் முதுநிலை படிப்பு முடித்து சமீபத்தில் இந்தியாவுக்கு திரும்பிய அவர் போதை பொருளுக்கு அடிமையாகி இருக்க கூடும் என போலீஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

சொத்து தகராறு மற்றும் தேஜாவின் பின்னணி உள்ளிட்ட விசயங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர். பிரபல தொழிலதிபர் பேரனால் பல முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here