திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனத்துக்காகக் குவிகின்றனர்.
நாளை பிப்ரவரி 11ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் கோவிலில் குவிந்து வருகிறார்கள்.
குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட சண்முகர் படங்கள் உள்ள வாகனங்கள் முன் செல்ல, பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்தே வந்து கோவிலில் குவிந்தனர்.
காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக் கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.நாளை பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.