கோலாலம்பூர்:
இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வ பயணமாக மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள துருக்கியே அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் இன்று மலேசியா வந்தடைந்தார்.

இன்று நண்பகல் 2.10 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய எர்டோகன் மற்றும் அவரது துணைவியாரை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது துணைவியார் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் வரவேற்றனர்.

அரச ரேஞ்சர் படைப்பிரிவின் முதலாவது பட்டாலியனின் மரியாதை அணிவகுப்பின் பின்னர், அனைவரும் புத்ராஜெயாவிலுள்ள அனைத்துலக மாநாட்டு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
துருக்கியேத் தலைவருடனான தனது உறவு, கஷ்டங்களின் மூலம் உருவாக்கப்பட்ட பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்றும், கடினமான காலங்களில் என்னைத் தொடர்ந்து ஆதரித்து வரும் உண்மையான நண்பர் துருக்கியே அதிபர் எர்டோகன் என்றும், புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் பேசியபொது பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பைத் தொடர்ந்து, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும். துருக்கியே அதிபருக்கு மலாயா பல்கலைக்கழகத்தில் உயர்ந்த கெளரவப்பட்டமும் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
























