பாரீஸ்,பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள கிராண்ட் பலாய்சில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (ஏஐ) குறித்த உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
ஏஐ தொழில்நுட்பம் இதுவரை இல்லாத அளவில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த நூற்றாண்டில் மனிதகுலத்தின் தலையெழுத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எழுதுகிறது. இதில் உள்ள அபாயங்களை களைந்து, இத்தெொழில்நுட்பத்தை அனைத்து நிலைகளிலும் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த உலகளாவிய ஒத்துழைப்பு தேவை. ஏஐ தொழில்நுட்பம் மூலம் சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் புரட்சி ஏற்படுத்த முடியும். ஏஐ தொழில்நுட்பத்தை பாதுகாப்பான முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வருங்காலத்தில் எல்லாருக்கும் நன்மை பயக்கும் என்பதை உறுதி செய்வதற்கான அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. பொது நலனைக் கருத்தில் கொண்ட செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை நாங்கள் உருவாக்கி வருகிறோம். ஏஐ தொழில்நுட்பத்தை ஏற்றுகொள்வதிலும், தரவு தனியுரிமை குறித்த தொழில்நுட்ப சட்டத்தை வகுப்பதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.பாரீஸ் செயற்கை நுண்ணறிவு மாநாட்டை தொடர்ந்து பிரதமர் மோடி, இமானுவேல் மேக்ரான் இடையே இருதரப்பு சந்திப்புகள் நடைபெறுகிறது. இதில் இரு நாட்டு உயர்மட்டக்குழுவும் பங்கேற்கிறார்கள்.