கோலாலம்பூர்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) முனையம் 1-இன் வருகைப் பகுதியில் பயணிகளிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்ட 27 வயது சீன நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மனநலப் பாதிப்பு காரணமாகக் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கேஎல்ஐஏ காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் எம். ரவி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி பிற்பகல் 1.19 மணியளவில் விமான நிலையப் புறப்பாடு மண்டபத்தில் சத்தமாக கத்தியவாறும், ஓடியும், பாடியும் நடனமாடியும் பயணிகளுக்குத் தொந்தரவு அளித்த அந்தப் பெண், பாதுகாப்பு அதிகாரிகளால் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உட்கொள்ள வேண்டிய மாத்திரைகளை அவர் உட்கொள்ள மறந்துவிட்டதாக அவரது கூட்டாளி காவல்துறையினரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைகளுக்காகக் காஜாங் மருத்துவமனையின் மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி மலேசியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இவர், அன்றைய தினமே சீனாவுக்குத் திரும்புவதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் நலமுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்தச் சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
























