மலேசியாவில் தயாரிக்கப்பட்ட ஹாப்பி ஃபேமிலி ஓட்மீல் குக்கிஸ்களை Happy Family Oatmeal cookies- சந்தையிலிருந்து திரும்ப பெற சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
லேபல்களில் அறிவிக்கப்படாத பால், அத்தின்பண்டத்தில் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதால், சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு நிறுவனம் அவ்வுத்தரவை வெளியிட்டது.
சிங்கப்பூரின் உணவு விதிமுறைகளின் கீழ், ஒவ்வாமை உள்ள பயனீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பால் போன்ற அதிக உணர்திறனை ஏற்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களையும் உணவுப் பொருட்களின் லேபல்களில் அறிவிக்க வேண்டும்.
பால் உணவுப் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், ஒவ்வாமை உள்ள நபர்களுக்கு அது தீங்கு விளைவிக்கும் என்பதை சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சுட்டிக் காட்டியது.
மேலும் இந்த Happy Family oatmeal பிஸ்கட்டுகளை வாங்கியவர்களில், பால் ஒவ்வாமை பிரச்சினையுடையவர்கள், அதை உட்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.









