இந்து சமயத்தைத் தொடர்ந்து இழிவு படுத்தி வரும் சமயப்போதகர் எனச் சொல்லிக் கொள்ளும் ஸம்ரி வினோத் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணம் அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்து சமயத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் ஸம்ரி வினோத்திற்கு எதிராக இந்துகள் அனைவரும் ஒன்று திரண்டு போலீஸ் புகார் செய்ய வேண்டும். அரசியல் நம்பிக்கைகளைத் தாண்டி இந்து சமயத்தின் மாண்பை முன்னிறுத்தி அனைவரும் ஒன்றிணைவோம் என்ற அவரது கோரிக்கையை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வரவேற்கிறது என்று அதன் தலைவர் மோகனன் பெருமாள் தெரிவித்தார்.
பல்வேறு தரப்பினர் இந்து சமயத்தை தொடர்ந்து விமர்சிப்பதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஒரு ஸம்ரி வினோத்துக்கு ஆதரவளித்து ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தின் ஆதரவை இழந்து விட வேண்டாம் என தப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் முன்வைத்துள்ள கருத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான அரசாங்கம் மிக முக்கியமான கோரிக்கையாக கருத்தில் கொள்ள வேண்டும்.
அரசியல் கருத்து வேறுபாடுகளை கடந்து ஒட்டு மொத்த இந்து சமூகமும் ஒன்று திரண்டு சம்ரி வினோத்திற்கு எதிராக போலீஸ் புகார் செய்ய வேண்டும் என டத்தோஸ்ரீ சரவணன் முன்வைத்துள்ள கோரிக்கையை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வரவேற்கிறது. இந்து சமயத்துக்கு எதிரான தொடர் தாக்குதலை நடத்தி வருவதை சம்ரி வினோதி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அரச மலேசியப் போலீஸ் படை அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் போலீஸ் புகார் செய்ய வேண்டும் என சங்கம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது என்று மோகனன் பெருமாள் குறிப்பிட்டார்.










