கெடாவின் சிக் பகுதியில் மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்ததில் 56 வயது நபர் ஒருவர் மண்டை ஓட்டில் இரும்பு கம்பி துளைத்ததில், அவர் நூழிலையில் உயிர் தப்பினார். சனிக்கிழமை காலை ஜாலான் ஜெனேரியின் கம்போங் புக்கிட் ஹாங்கஸில் நடந்த ஒரு விபத்தில் அஸ்லான் மஹ்மூத் தலையில் பலத்த காயம் அடைந்ததாக மலாய் நாளிதழான சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு உறுப்பினர்களை அனுப்புவதற்கு முன்பு, மெர்ஸ் 999 லைன் வழியாக அவசர அழைப்பு வந்ததாக சிக் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் முகமட் ஜமீல் மாட் தெரிவித்தார்.
அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பாதிக்கப்பட்டவரின் முகத்தின் பக்கவாட்டில் தலை வரை இரும்பு கம்பி ஊடுருவி பலத்த காயமடைந்ததைக் கண்டனர் என்று அவர் கூறினார். யயாசன் ஜாரியா மலேசியா ஆம்புலன்ஸ் மூலம் அஸ்லான் சிக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு முதலுதவி அளிக்கப்பட்டது.
இரும்பு கம்பியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை சிக் மருத்துவமனையில் நடத்தப்பட்டதாகவும், அஸ்லான் தொடர்ந்து மருத்துவ மேற்பார்வையில் இருப்பதாகவும் அவர் கூறினார். சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி 0.6 செ.மீ கம்பியை அகற்றும் அறுவை சிகிச்சை மதியம் 12.05 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று முகமட் ஜமீல் கூறினார். பின்னர் பாதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று அவர் மேலும் கூறினார்.









