மக்கள் மனதைத் தொட்ட சொக்சோவின் ராயா வீடியோ .

கோலாலம்பூர்,

இவ்வாண்டு ஹரிராயா பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சமூகப் பாதுகாவல் நிறுவனமான சொக்சோ வெளியிட்டிருக்கும் ‘டெமி காசே’ என்ற காணொளி காண்போர் நெஞ்சத்தை நெகிழச் செய்யக்கூடியதாக அமைந்திருக்கிறது.

குடும்ப உறவு பிணைப்பை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது அந்தக் காணொளி. வருமானம் ஈட்ட சொந்தக் கிராமத்தை விட்டு நகர்ப்புறத்தை நாடிச் சென்று அங்கேயே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் இளைய தலைமுறையினர், கிராமத்தில் குடும்பத்தினரின் தொடர்பை இழக்கும் ‘சவாலை’ அடிப்படையாகக் கொண்டதாகும் இந்தக் காணொளி.

‘அன்புக்காக’ என்ற தலைப்புக்கு ஏற்றவாறு இந்தக் கதைக்களம் பாசப்போராட்டத்தைப் தாய் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. தந்தையரின் பாசத்தைப் புறக்கணித்துவிட்டு பின்னர் அதற்காக மனம் வருந்தும் ஓர் இளைஞனின் உள்ளத்துணர்வுகளையும் பின்னர் அதற்காக மனம் திருந்தி பின்னர் நிலைமையைச் சீராக்க சில தீர்வுகளை முன்னெடுக்கும் உன்னதமான கதைக்களமாக இது அமைந்திருக்கிறது.

பெற்றோர் வாழும் சமயத்தில் அவர்களின் பாசத்தைப் புரிந்துகொள்ளாமல் அவர்களின் மனதைக் காயப்படுத்தி விட்டோமே என்று ஏங்கும் ஹபிஸ் என்ற இளைஞன், ஒரு ஹரிராயா விடுமுறைக்காக கிராமத்திலுள்ள தாய் வீட்டுக்குத் திரும்புகிறார். அப்போது தம் தாய் தந்தையருடன் இளம் பிராயத்தில் வீட்டில் மகிழ்ந்திருந்த இனிய தருணங்களும் தாய் தந்தையர் தம் மீது கொண்ட பாசமும் அவரது எண்ணங்களில் தோன்றி அவரது உணர்வுகளை ஆக்கிரமிக்கிறது. தாய் தந்தையரின் அவாவை ஈடு செய்யாமல் போய்விட்டோமே என்ற வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பழைய பசுமையான இனிய நினைவுகளை நிரப்ப முயற்சி செய்யும் இளைஞனின் கதைதான் டெமி காசே.

உறவுகளும் அவர்களுக்கிடையிலான பாசப் பிணைப்புகளும் ஒரு போதும் புறந்தள்ளப்படக்கூடாது என்பதை வலியுறுத்தும் வண்ணம் இந்தக் காணொளி அமைந்திருப்பதாக சொக்சோ தொடர்பு கழக விவகாரத்துறை தலைமை அதிகாரி ரொஸைமி மாட் ரோஸ்லி தெரிவித்தார்.

பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எதையும் செய்யும் தியாக உணர்வைக் கொண்ட பாசமிகு பெற்றோரின் அன்பு பற்றி தெரிவிக்கும் காணொளியாகும் இது. அதேசமயத்தில் எதிர்பாராத துயரச் சம்பவங்களினால் நேரிடும் இக்கட்டான தருணங்களின்போது சொக்சோ காப்பீடு எத்தகைய உதவியை வழங்கும் என்பதை வலியுறுத்துவதாகவும் இந்தக் காணொளி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் சுட்டிக்க்காட்டினார்.

சொக்சோவில் இப்போது பலவகையான பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளன. மலேசியர்கள் யாவருமே இவற்றின் மூலம் பயனுற வேண்டும். நிறுவனங்களில் பணிபுரிவோரும் முதலாளியரும் மட்டுமே பயனுறக்கூடிய திட்டங்களாக இல்லாமல் சொந்தத் தொழில்புரிவோரும் குடும்பத் தலைவியரும்கூட ஆதாயமடையக்கூடிய பல சிறப்புத் திட்டங்கள் இப்போது சொக்சோவில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று அவர் விவரித்தார்.

சொக்சோ அதிகாரத்துவ இணையத் தளத்தில் இந்த ஹரிராயா சிறப்புக் காணொளி இம்மாதம் 15ஆம் தேதி முதல் ஒளியேற்றப்படுகிறது. தொலைக்காட்சியில் நேற்று மார்ச் 24ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரையில் இந்தக் காணொளி இடம்பெறும். சொக்சோ தளத்தில் இந்தக் காணொளி இடம்பெற்ற 60 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதனைக் கண்டு களித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here