அயிர் குரோ:
PKR கட்சியின் 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய மாநாடு மலாக்கா, அயிர் குரோவில் உள்ள ‘மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில்’ (MITC) இன்று முறைப்படி தொடங்கியது.
இம்மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தற்போதைய மாறுபட்ட அரசியல் சூழலில் கட்சியின் உத்திகள் மற்றும் எதிர்கால வழிகாட்டுதல்களைத் தெளிவுபடுத்தினார்.
“சீர்திருத்தத்தை மீட்டெடுப்போம், மடானியை உருவாக்குவோம்” என்ற கருப்பொருளின் கீழ் இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாடு, கட்சியின் முதன்மைக் கொள்கையான சீர்திருத்தக் கோட்பாடுகளை மீண்டும் வலுப்படுத்துவதை நோக்கக் கொண்டுள்ளது.
பிரதான மாநாட்டிற்கு முன்னோடியாகக் கட்சியின் இளைஞர் பிரிவான ‘அங்காத்தான் மூடா கேடிலான்’ (AMK) மற்றும் மகளிர் பிரிவுகளின் கூட்டங்கள் நேற்றைய தினம் துணைத் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வாரால் தொடங்கி வைக்கப்பட்டன.
நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2,500 பிரதிநிதிகள் மற்றும் 3,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற முன்னணி உலக நாடுகளின் தூதரகப் பிரதிநிதிகளும் உள்ளூர் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.
இம்மாநாட்டின் விவாதங்கள் முக்கியமாக மக்களின் அத்தியாவசியத் தேவைகளான பொருளாதாரம், கல்வி மற்றும் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றைக் மையமாகக் கொண்டு அமையும். மாநிலங்கள் மற்றும் கட்சியின் பல்வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 16 பேச்சாளர்கள் இதில் உரை நிகழ்த்துகின்றனர்.
பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காகத் தேசியப் பதிவுத் துறை (JPN), குடிவரவுத் துறை ஆகியவை மாநாட்டு வளாகத்தில் தங்களின் சேவைச் சாவடிகளை அமைத்துள்ளன. அத்துடன் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சார்பில் ‘கர்னிவல் ரஹ்மா மேகா’ விற்பனை முகாமும் பொதுமக்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாளைய தினம் தனது நிறைவுரையாற்றியவுடன் இம்மாநாடு நிறைவுபெறும்.
























