பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ், மாநிலம் முழுவதும் உள்ள வணிக வளாகங்களில் இ-சிகரெட்டுகள், வேப்ஸ் விற்பனையை தடை செய்ய மாநில அரசு திறந்திருப்பதாகக் கூறினார். இருப்பினும், முன்மொழியப்பட்ட தடை குறித்த முறையான விவாதங்கள் இன்னும் நடைபெறவில்லை என்று அவர் கூறினார்.
மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இளைஞர், விளையாட்டு, சுகாதாரக் குழுத் தலைவர் டேனியல் கூய் இந்த விஷயத்தை முன்வைப்பதற்காக நாங்கள் காத்திருப்போம். அதன் பிறகுதான் நாங்கள் மேலும் ஆலோசித்து அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம என்று புலெடின் முத்தியாரா அவரை மேற்கோள் காட்டி கூறினார்.
முன்னதாக, துணை காவல் கண்காணிப்பாளர் அயோப் கான் மைடின் பிச்சை, புதிய செயற்கை மருந்துகளின் துஷ்பிரயோகத்துடன் தற்போது அதிகரித்து வரும் வேப்களின் விற்பனையைத் தடை செய்ய மேலும் பல மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
13 வயதுக்குட்பட்ட மாணவர்கள் போதைப்பொருட்களுடன் கலந்த வேப்களைப் பயன்படுத்துவதில் பிடிபட்டுள்ளனர். இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாட்டிற்கு புதிய அச்சுறுத்தலாக அமையும் என்று அவர் கூறினார்.
2016 ஆம் ஆண்டு ஜோகூரில் வேப் பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1 முதல் வணிக வளாகங்களில் வேப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் இரண்டாவது மாநிலமாக திரெங்கானு மாற உள்ளது.
நேற்று, சிலாங்கூர் பொது சுகாதாரம் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஜமாலியா ஜமாலுதீன், மின்னணு சிகரெட்டுகள் மற்றும் வேப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் திட்டம் குறித்து ஆலோசிக்க மாநில அரசு விரைவில் ஒரு கூட்டத்தைக் கூட்டும் என்றார்.








