கொசோவோ அதிபர் விஜோசா ஒஸ்மானி சத்ரியு மலேசியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

சிப்பாங்:

கொசோவோ நாட்டு அதிபர் டாக்டர் விஜோசா ஒஸ்மானி சத்ரியு இன்று வியாழக்கிழமை (மே 1) முதல் நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக மலேசியாவிற்கு வந்தடைந்தார், கடந்த ஏப்ரல் 4, 2021 அன்று அவர் அதிபராக பதவியேற்றதிலிருந்து மலேசியாவிற்கு தனது முதல் வருகையை மேற்கொண்டுள்ளார்.

வணிக விமானத்தில் இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு (KLIA முனையம் 1) வந்தடைந்த உஸ்மானியை, மாலை 5.25 மணிக்கு புங்கா ராயா வளாகத்தில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் அன்புடன் வரவேற்றார்.

அவர் அங்கு வந்தடைந்ததும், கேப்டன் முஹமட் நபிஸ் நோர்ஷித் தலைமையிலான ராயல் ரேஞ்சர் படைப்பிரிவின் (விழா) முதல் பட்டாலியனைச் சேர்ந்த 28 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அணிவகுப்பு மரியாதையை வழங்கினர்.

விஸ்மா புத்ராவின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை (மே 2) பெர்டானா புத்ரா வளாகத்தில் உஸ்மானிக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு விழா நடத்தப்படும், அதைத் தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமுடன் இருதரப்பு சந்திப்பு நடைபெறும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த சந்திப்பில், வர்த்தகம், முதலீடு, கல்வி மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டு ஆசியான் அமைப்பின் மலேசியாவின் தலைமைத்துவம் உட்பட, பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here