பெர்சத்து நீக்கம்: பதவி பறிபோகாது – புதிய கட்சி தொடங்க ஹம்சா தரப்பு திட்டம்?

கோலாலம்பூர்:

பெர்சத்து கட்சியிலிருந்து முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுடின் உள்ளிட்ட 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்ட போதிலும், அவர்கள் தங்களின் மக்கள் பிரதிநிதி பதவியை இழக்க மாட்டார்கள் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பெடரல் அரசியலமைப்புச் சட்டத்தின் 49(ஏ) பிரிவின்படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் அவரது இடம் காலியாகாது. இதனால் அவர்கள் தங்களின் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதோடு, இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியமும் ஏற்படாது என்று சட்ட நிபுணர் ஹனிஃப் கத்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இந்த உறுப்பினர்கள் அனைவரும் சுயேச்சையாகச் செயல்படலாம் அல்லது புதிய அரசியல் கட்சியைத் தொடங்கலாம். திரு. ஹம்சா மற்றும் அவரது ஆதரவாளர்கள் புதியதொரு கட்சியைத் தொடங்கி, அதன் மூலம் பாஸ் (PAS) கட்சியுடன் கூட்டணியைத் தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், புதிய கட்சி தொடங்குவது அதிகச் செலவு மற்றும் சவால்கள் நிறைந்தது என்பதால், அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் வரை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலேயே தற்காலிகமாக நீடிக்கவும் வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் சிவமுருகன் பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் பெர்சத்து கட்சித் தலைவர் முகைதீன் யாசினுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஸ் கட்சி முகைதீனை விட ஹம்சா ஜைனுடினுடன் நெருக்கமாகச் செயல்படவே விரும்புவதாகத் தெரிகிறது. அதேவேளையில், ஹம்சா தரப்பினர் மீண்டும் அம்னோவில் இணைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், அவ்வாறு இணைந்தால் அவர்கள் மீதான மக்களின் நம்பிக்கை குறையக்கூடும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here