ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்
இதற்கு கடந்த 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்து பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து இருநாடுகள் இடையே மோதல் அதிகரித்தது.
பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க முயன்றது. அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன.
இதனையடுத்து, இருநாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து இரு நாட்டின் எல்லையில் தற்போது அமைதி நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை வழங்கியதாக பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, குசாலா, யமீன், தேவிந்தர், அர்மான் உள்பட 6 பேரை உளவுத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா (34). இவர் ‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். பிரபலமான இடங்கள் குறித்து இவரது யூடியூப் சேனலில் தகவல்களைப் பகிர்வதால் சமூக வலைதளத்தில் புகழ்பெற்றுள்ளார்.
கைதான இவர்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் ரகசிய தகவல்களை உளவு பார்த்து சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜோதி மல்ஹோத்ரா கடந்த 2023-ம் ஆண்டு கமிஷன் ஏஜெண்டு மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். இவருக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் டேனிஸ் எனப்படும் எஹ்சான்-உர்-ரஹீம் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர் பல பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனங்களை, ஜோதிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும், ஜோதியும், டேனிஸும் மிக நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், வாட்ஸ்-அப், டெலிகிராம் உள்ளிட்ட செல்போன் செயலிகள் மூலம் பாகிஸ்தானியருடன் ஜோதி தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்திய பகுதிகள் குறித்த ரகசியங்களை அவர்களுக்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர்.
மேலும், பாகிஸ்தானுக்கு முகவர்களாகவும், ரகசியங்களை கொடுப்பவர்களாகவும், நிதி பரிமாற்றம் செய்பவர்களாகவும் இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்தே இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவருடனும் ஜோதி நெருக்கமாக இருந்துள்ளார். அவருடன் சேர்ந்து இந்தோனேசியாவின் பாலி நகருக்கு சென்று வந்துள்ளார்.
அங்கிருந்து பல்வேறு பாகிஸ்தான் உளவாளிகளுக்கு தகவல்களைக் கொடுத்து வந்துள்ளார். பாகிஸ்தான் உளவாளிகளுடன் நெருங்கிப் பழகி பல்வேறு ராணுவத் தகவல்களைக் கொடுத்து வந்துள்ளார். இதற்காக ஏராளமான பணத்தையும் அவர் பெற்றுள்ளார். உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவர் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
ஜோதி இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அவரது சமூக வலை தளத்தில் பாகிஸ்தானை அடிக்கடி புகழ்ந்து பேசியுள்ளார். பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், சாதகமாகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவர் செய்துள்ள பதிவு ஒன்றில் லாகூரை பாகிஸ்தானின் கலாச்சார இதயம் என்று கூறியுள்ளார். அவர் பாகிஸ்தானுக்கு 4 முறைக்கு மேல் சென்று வந்துள்ள தாகவும் பதிவிட்டுள்ளார்.
இவரது யூடியூப்பிற்கு 3.2லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் இவரை 13.4 லட்சத் திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
இவர் மீது பி.என்.எஸ். சட்டப்பிரிவு 152-ன் கீழ் 3, 4, 5 ரகசிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோதி 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இப்போது இந்த வழக்கு ஹிசார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஜோதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.