தென்கிழக்கு ஆசியாவின் 2ஆவது ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் (GCC) உச்சநிலை மாநாடு விதிவிலக்கானது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்தார். ஆசியான் தலைவர்கள் மட்டுமல்லாமல் பிராந்தியத்தின் மிகவும் துடிப்பான GCC நாடுகளின் பிரதிநிதிகளும் இருப்பது இரு குழுக்களுக்கும் இடையே வளர்ந்து வரும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்புக்கு ஒரு சான்று என்றும் அவர் எடுத்துரைத்தார். இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம், மூலோபாய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வளைகுடா நாடுகளுடனான ராஜதந்திரத்தில் ஒரு அசாதாரண மைல்கல்லாக இந்த உச்சநிலை மாநாடு அமைந்திருக்கிறது என்று அன்வார் தெரிவித்தார்.
இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும் 2ஆவது ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் (GCC) உச்சநிலை மாநாட்டில், குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலித் அல்-ஹமத் அல்-சபாவை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அன்புடன் வரவேற்கிறார். இந்தப் பிராந்தியத்தில் எங்களின் அனுபவத்தில் இது மிகவும் அசாதாரணமானது – ஆசியான் தலைவர்களை மட்டுமல்ல, மிகவும் துடிப்பான ஜி.சி.சி நாடுகளையும் இந்தப் பிராந்தியத்திற்குக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையோடு, ஒன்றிணைந்து செயலாற்றுவது, நம்பிக்கை, ஒத்துழைப்பு, உண்மையான நட்பை பேணுவது ஆகிய குறிக்கோள்களுடன் இரண்டாவது ASEAN-GCC உச்சநிலை மாநாட்டை தொடக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் கூறினார்.
2023 ஆம் ஆண்டு ரியாத்தில் நடைபெற்ற தொடக்க ASEAN-GCC உச்சிமாநாட்டின் போது அமைக்கப்பட்ட அடித்தளங்களின் அடிப்படையில் இந்த உச்சிமாநாடு கட்டமைக்கப்படுவதாக அன்வர் கூறினார். தொடர்ச்சியான ஈடுபாடு இரு பிராந்திய குழுக்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்பதை உறுதிப்படுத்தினார். 2025ஆம் ஆண்டு ஆசியான் உச்சநிலை மாநாட்டின் முக்கிய கூட்டமாக, “உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை” என்ற தலைமை கருப்பொருள், எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட வளர்ச்சிக்கான விருப்பத்தை பிரதிபலிக்கிறது என்று அன்வார் கூறினார்.









