வீட்டின் சமையலறையில் எட்டு நாக பாம்புக் குட்டிகள் கண்ட தம்பதியினர் அதிர்ச்சி

கோல திரெங்கானு:

இங்குள்ள கம்போங் பாங்கோல் கத்தோங்கில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையில் எட்டு நாக பாம்புக்குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை (மே 27) சமையலறையில் நீர் அருந்திக் கொண்டிருந்தபோது, ​​தனது கால்களிலிருந்து சில அங்குலங்கள் தொலைவில் பாம்புக்குட்டி இருப்பதைக் கண்டதாக 29 வயதான முகமட் அஸ்லம் ஹுசைனி முகமட் தௌபிக் கூறினார்.

“இது விஷமற்ற குட்டிப் பாம்பு என்று நான் நினைத்தேன், அதனால் அதை சாகடித்து வீசினேன். அது சிறியதாக இருந்ததாலும் தலையை உயர்த்தாததாலும் அப்போது எனக்கு எதுவும் சந்தேகம் எழவில்லை,” என்று வியாழக்கிழமை (மே 29) தனது வீட்டில் சந்தித்தபோது அவர் கூறினார்.

இருப்பினும், மாலை சமைக்கத் தயாராகும் போது சமையலறை கதவின் பின்னால் மேலும் ஐந்து குட்டிப் பாம்புகளைக் கண்டதாகக் கூறினார்.

“குட்டி நாக பாம்புகளில் ஒன்று தலையை உயர்த்தி அதன் படத்தை விரித்ததால், நான் பயந்துபோய் உடனடியாக சிவில் பாதுகாப்புப் படையைத் தொடர்பு கொண்டேன்,” என்று அவர் கூறினார்.

பின்னர் சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் குட்டி நாக பாம்புகளை அகற்ற உதவியதாக அவர் கூறினார்.

“இருப்பினும், சுமார் மூன்று மணி நேரம் கழித்து, சமையலறையில் மேலும் இரண்டு பாம்புக் குட்டிகளைக் கண்டுபிடித்து மீண்டும் அழைத்தேன்,” என்று அவர் கூறினார்.

பின்னர், ஆறு மாத கர்ப்பிணியான தனது மனைவி ஷஃபிகா அரிசா ரம்லானை (28) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது தந்தையின் வீட்டிற்கு அனுப்பிவைத்ததாக அவர் கூறினார்.

இந்நிலையில், கோலா நெராஸ் சிவில் பாதுகாப்புப் படை செயல்பாட்டு அதிகாரி லெப்டினன்ட் (PA) நோர் டாலியா ரசெலன் கூறுகையில், மீட்கப்பட்ட அந்த நாக பாம்புக்குட்டிகள் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையிடம் (பெர்ஹிலிடன்) ஒப்படைக்கப்படும் என்று சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here