அமெரிக்கா – சீனா இடையே உறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தம்

வாஷிங்டன்,அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். இதன்படி சீனா மீது 34 சதவிகித வரியை விதித்தார். இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது.

இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவிதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவிகித வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு சென்றது. இதனால், உலகளாவிய பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இறுதியாக, இரு நாடுகளும் 90 நாட்களுக்கு வரி விதிப்பை ஒத்திவைப்பதாக பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டன.

இருப்பினும், ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக, இரு நாடுகளும் குற்றஞ்சாட்டிக் கொண்டன. இதனிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பும் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இநிலையில் லண்டனில் உயர் அதிகாரிகளுக்கு இடையே இரண்டு நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சீனாவுடனான ஒப்பந்தம் “உறுதி செய்யப்பட்டதாக” அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

இதன்படி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சீனா அமெரிக்காவுக்கு காந்தங்கள், அரிதான பூமித் தனிமங்களை வழங்கும் என்றும், சீன மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்கா அனுமதிக்கும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டில், இரு நாடுகளுக்கு இடையே 58,200 கோடி டாலர் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்ற நிலையில், வரிப் போரால் நடப்பாண்டு வர்த்தகம் வெகுவாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here