அமதாபாத் விமான விபத்து: உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யமுடியாமல் தவிக்கும் குடும்பத்தினர்

அமதாபாத்,குஜராத் மாநிலம் அமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ந்தேதி புறப்பட்ட விமானம், பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில், அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் வெடித்து சிதறியதில் அதில் இருந்த 241 பேரும், மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 5 எம்.பி.பி.எஸ் மாணவர்களும், பொதுமக்கள் 24 பேரும் என 270 பேர் பலியானார்கள். விஸ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். பலியானவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காணமுடியாத வகையில் கரிக்கட்டைகளாகிவிட்டன.

எனவே அந்த உடல்களை அடையாளம் காண்பதற்கு மரபணு பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. இந்த சோதனை முடிவு வருவதற்கு தாமதமாகும். பலியானவர்களின் குடும்பத்தினர், தங்களின் அன்புக்குரியவரின் உடலை பெற்றுச்செல்வதற்காக கடந்த 12-ந் தேதியே அங்கு வந்துவிட்டனர். அவர்களிடம், மரபணு பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சிலரது உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. அந்த உடல்களுக்கான மரபணுசோதனை முடிவுகள் வரவில்லை.

உடல்கனை பெற முடியாததால், உயிரிழந்த தங்களது உறவினருக்கு இறுதிச்சடங்கு செய்யமுடியாமல் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள். உடலை பெறுவதற்காக கடந்த 5 நாட்களாக அவர்களின் உறவினர்கள் ஆம்புலன்சுடன் மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை வரை 119 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, 76 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் பலியான மராட்டிய மாநிலம் நவி மும்பையில் உள்ள நவா பகுதியை சேர்ந்த மைதிலி பாட்டீலின் உடலை பெறுவதற்காக வந்திருந்த அவரது உறவினர்கள் கூறுகையில், ‘மரபணு சோதனை முடிவுகள் வராததால் மைதிலியின் உடல் இன்னமும் எங்களுக்கு கிடைக்கவில்லை’ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

இவ்வாறு துயரத்தில் மூழ்கிய குடும்பத்தினருக்கு, சிவில் ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி, ‘ஆறுதல் கூறியதுடன், சிரமத்துக்கு பொறுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு விரைவில் உடல்களை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் வழங்கிவிடுகிறோம்’ என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here