வாஷிங்டன்:
ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மற்றும் அதிபர் டிரம்பை கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. போர் நடவடிக்கைகளை டிரம்ப் உடனடியாக நிறுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் குறித்து டிரம்ப் பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், வெள்ளை மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொய்களின் அடிப்படையினாலான போர் ஏற்க முடியாது என முழக்கமிட்டனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டிரம்புக்கு எதிராகவும், ஈரானுக்கு எதிரான போரை நிறுத்த கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒரு போர் குற்றவாளி என்றும் அவர் குற்றம் சாட்டினர். கனடாவின் டொரோண்டோ நகர் அமெரிக்கா தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இன அழிப்பில் ஈடுபடும் இஸ்ரேலுக்கு டிரம்ப் ஆதரவு அளிப்பதாக புகார் கூறினர். இன்னொரு போரை உலகம் எதிர்கொள்ள முடியதும் என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.









