சுரங்க லைசென்ஸ் வழங்குவதில் ஊழல் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கைது .

கோத்தாகினாபாலு, 

சபா மாநிலத்தில் சுரங்கத்தொழில் லைசென்ஸ் வழங்குவதில் லஞ்சம் கேட்டுப் பெற்ற சந்தேகத்தின் பேரில் மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கைது செய்து தடுத்து வைத்துள்ளது. சபா மாநில எஸ்பிஆர்எம் அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்றுக் காலை 9.30 மணிக்கு அங்கு வந்த 40 வயதுக்குட்பட்ட அந்த சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார் என்று தகவல் அறிந்த பக்கம் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் அவர் கிட்டத்தட்ட 150,000 ரிங்கிட்டை லஞ்சமாகக் கேட்டுப் பெற்றார் என்று சொல்லப்படுகிறது. 2003ஆம் ஆண்டில் இருந்து 2024ஆம் ஆண்டுக்கு உட்பட்ட காலகட்டத்தில் இத்தொகையை அவர் லஞ்சமாகப் பெற்றார் என்று சொல்லப்படுகிறது. இவர் ஓர் அமைச்சரின் உதவியாளராகவும் இருந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சபாவில் சுரங்கத்தொழில் லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பம் செய்த டத்தோ அந்தஸ்து கொண்ட ஒருவருக்கு அதனைக் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லி 150,000 ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றார் என்பது புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

இதனிடையே இவ்விவகாரம் குறித்து எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியைத் தொடர்பு கொண்டபோது, 2009 எஸ்பிஆர்எம் சட்டம் பிரிவு 16 (a) (A) கீழ் அந்த சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார்.

அதேசமயத்தில் 50 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் ஒரு நபர் உத்தரவாதத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் வாக்குமூலம் பெற்ற பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பதை உறுதிப்படுத்திய அவர், மிகக் குறுகிய காலத்தில் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்றார்.

இதே காரணத்திற்காக கடந்த ஜூன் 18ஆம் தேதி ஒரு வர்த்தகரும் டத்தோ அந்தஸ்து கொண்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருவரும் 100,000 மேலும் 50,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here