ஆயர் சிலாங்கூர் 5ஆம் ஆண்டாக விவேக அறிக்கையை வெளியிட்டது .

News By Kaaviyah Rajamohan

கோலாலம்பூர்,

ஆயர் சிலாங்கூர் செண்டிரியான் பெர்ஹாட் (ஆயர் சிலாங்கூர்) மலேசியாவில் மிகப்பெரிய குடிநீர் சேவை வழங்கும் நிறுவனமாகும். ஆயர் சிலாங்கூர் 2024 விவேக அறிக்கையை 5ஆவது ஆண்டாக தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

2024 ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதி வரை ஓராண்டு காலத்தில் ஆயர் சிலாங்கூர் மேற்கொண்ட பல்வேறு திட்டங்கள், அவற்றின் அடைவுநிலைகள் ஆகியவை தொடர்பான தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மேலும் செயல்திறன் வழி விவேகத் திட்டங்களை முன்னெடுத்து குடிநீர் விநியோகத்தை நிலைப்படுத்தும் கடப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறது என்று ஆயர் சிலாங்கூர் செண்டிரியான் பெர்ஹாட் தலைமை நிர்வாக அதிகாரி அடாம் சாஃபியான் கஸாலி கூறினார்.

இங்கு பங்சாரில் உள்ள வாணிக மையத்தில் ஆயர் சிலாங்கூரின் விவேக அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. 2024ஆம் ஆண்டில் ஆயர் சிலாங்கூர் குடிநீர் சேவையில் அடைந்திருக்கும் அடைவுநிலை, வெற்றிகள், விவேகத் திட்டங்கள் ஆகியவை இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதேசமயத்தில் பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகம் ஆகியவற்றுக்கான ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளையும் அது பட்டியலிட்டுள்ளது. ஆயர் சிலாங்கூரின் மிகச்சிறந்த நிர்வாகத்தின் காரணமாக நாள் ஒன்றுக்கு 298.36 மில்லியன் லிட்டர் குடிநீர் சேமிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் குடிநீர் கையிருப்பு 18.60 விழுக்காடாக உயர்வு கண்டிருக்கிறது. 2023ஆம் ஆண்டு இதன் அளவு 15.34 விழுக்காடாக இருந்தது. ஆண்டுக்கு ஒவ்வொரு 100 கிலோ மீட்டருக்கும் 3.25 உடைந்த குழாய்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது. 2023இல் இது 4.18 சம்பவமாக இருந்தது.

2016ஆம் ஆண்டு தொடங்கி 1,008,58 கிலோ மீட்டர் நீளத்திற்குப் புதிய குழாய்கள் மாற்றப்பட்டதில் நீர்க்கசிவு குறைக்கப்பட்டிருக்கிறது. மலேசிய சுகாதார அமைச்சு நிர்ணயித்திருக்கும் குடிநீர்த் தடம் 99,93 விழுக்காடாகும். ஆயர் சிலாங்கூர் கடந்த 4 ஆண்டுகளாக 99 விழுக்காட்டைத் தொடர்ச்சியாக நிலைநிறுத்தி வருகிறது. 2024இல் மொத்த வருமானம் 2.98 பில்லியன் ரிங்கிட்டாகும். 2023இல் வருமானம் 2.82 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது என்று அடாம் சாஃபியான் கஸாலி தெரிவித்தார்.

இந்தச் சாதனைகளானது ஆயர் சிலாங்கூரின் கடப்பாட்டை நிரூபித்திருக்கிறது. ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்படும்போது அதில் திறனும் தாக்கமும் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்பதை ஆயர் சிலாங்கூர் இலக்காகக் கொண்டு செயல்பட்டிருக்கிறது.

2024ஆம் ஆண்டில் ஏழைகளுக்கு 406,631.84 ரிங்கிட்டை ஆயர் சிலாங்கூர் வழங்கி இருக்கிறது. அதேசமயம் 1,800 உணவுப் பெட்டிகள் 19 சமூக நல இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. பி40 பிரிவைச் சேர்ந்த 240 மாணவர்களுக்கு பாயோங் செசாமா மாரா திட்டத்தின் கீழ் உதவிகள் நல்கப்பட்டிருக்கின்றன. என்றும் அடாம் சாஃபியான் கஸாலி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here