எஸ்எஸ்டி வரி தனியார் பாலர்பள்ளி கட்டணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தாது – நான்சி ஷுக்ரி .

கோலலங்காட்,

விரிவுபடுத்தப்பட்டிருக்கும் விற்பனை, சேவை வரி (எஸ்எஸ்டி) தனியார் சிறார் காப்பகங்கள், பாலர்பள்ளிகள் ஆகியவற்றில் விதிக்கப்படும் கட்டணங்களில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. பெற்றோருக்கும் நிதிச் சுமையைத் தராது என்று மகளிர், குடும்பம், சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி கூறினார்.

எஸ்எஸ்டி வரியானது அவற்றை நடத்துபவர்களுக்கு மட்டுமே விதிக்கப்படும். ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 60 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மேல் டியூஷன் கட்டணம் இருக்கும்பட்சத்தில் எஸ்எஸ்டி விதிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

பொதுமக்கள் குறிப்பாக பெற்றோர் கவலைகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆண்டுக்கு 60 ஆயிரம் ரிங்கிட் கட்டணம் விதிக்கும் அளவுக்குப் பெரும்பாலான தனியார் பாலர்பள்ளிகள் செயல்படுவதில்லை. அவற்றின் கட்டண அளவு குறைந்திருப்பதே இதற்கான காரணமாகும் என்று இங்கு 2025 அஞ்சோங் சினார் பாராட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ நான்சி குறிப்பிட்டார்.

நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்கு மடானி அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளைத் தொழில்முனைவோர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்று அவர் நினைவுறுத்தினார்.

எஸ்எஸ்டி வரி விதிப்பை ஒரு காரணமாகக் கொண்டு பெற்றோருக்கு நிதிச்சுமையைத் தரும் எந்தவொரு முயற்சிகளிலும் தொழில்முனைவோர் ஈடுபடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். கல்வித்துறையில் ஈடுபட்டிருப்போர் பெற்றோருக்கு நேர்மையாக உதவி செய்ய வேண்டும். அப்போதுதான் கல்வித்துறையில் அவர்கள் நீடித்து நிலைபெற்றிருக்க முடியும்.

தனியார் கல்வித்துறையில் ஈடுபட்டிருப்போர் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டுமே தவிர அளவுக்கு அதிகமாக கட்டணத்தை விதிக்கக்கூடாது என்று அவர் நினைவுறுத்தினார். எஸ்எஸ்டி இன்று ஜூலை 1ஆம் தேதி முதல் தனியார் பாலர்பள்ளிகள், தனியார் பள்ளிகள் அமல்படுத்தப்படுகிறது. இந்த வரி விதிப்புக்குள் உள்ளடங்குகின்றன. இது மலேசியப் பிரஜைகளுக்கும் உடற்பேறு குறைந்தவர்களுக்கும் பொருந்தாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். இதனிடையே நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் யாயாசான் கெபாஜிக்கான் நெகாரா ஏற்பாடு செய்த அஞ்சோங் சினார் திட்டத்தில் கல்வி, தலைமைத்துவம், சமூகம், தொழில், தன்னார்வலர் சேவை ஆகிய பிரிவுகளில் நனிச்சிறந்தவர்களுக்கு டத்தோஸ்ரீ நான்சி விருதுகளை வழங்கினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here