“அவர் அழுதார், ஆனால் இந்த முறை துன்பத்தால் அல்ல” – செனட்டர் லிங்கேஸ்வரன்.

News By Kavinmalar

ஜூரு,

வாழ்க்கையில் ஏராளமான சோதனைகளை எதிர்கொண்டு, மன உறுதியுடன் அதைச் சமாளித்த மாற்றுத் திறனாளியான ஏகாம்பரம் த/பெ கன்னி (வயது 76) என்பவருக்கு இன்று ஒரு மின்சார மோட்டார் சைக்கிளை அன்பளிப்பாக வழங்கும் வாய்ப்பு கிடைத்ததாக மலேசிய மேலவை உறுப்பினர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

நீரிழிவு நோயால் தனது இரண்டு கால்களையும் இழந்த ஏகாம்பரம், கடந்த ஆண்டு தனது வாழ்க்கைத் துணையை இழந்துள்ளார். தற்போது தனியாக வசிக்கும் அவர், மாதம் மாதம் சமூக நலத்துறையிலிருந்து பெறும் 300 ரிங்கிட் தொகையை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியுள்ளார். இது அவருடைய தேவைகளுக்கு போதுமானதாக இல்லாததால், மருத்துவ பரிசோதனைக்குப் போவதற்கும் க்ராப் (Grab) போக்குவரத்தை பயன்படுத்துவதற்கும் கூட பலமுறை அவதிப்பட்டுள்ளார்.

“நான் அந்த மோட்டார் சைக்கிளின் சாவியை அவரிடம் ஒப்படைத்த போது, ஏகாம்பரம் நீண்ட நேரம் அதைப் பார்த்துக்கொண்டே நின்றார். அவரது குரல் தளர்ந்து, ஒரு கணம் பேச முடியாமல் நின்றார். ‘லிங்கேஸ், எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என் வாழ்க்கை இறுதி வரை கடினமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இன்று… கடவுள் ஒருவரை அனுப்பினார்,’ என்று அவர் கண்ணீருடன் கூறினார். அதை பார்த்த நான் கூட கண்ணீர் விட்டேன்,” என்று லிங்கேஸ்வரன் கூறினார்.

ஏகாம்பரம் தனது வாழ்க்கையை மீண்டும் சுயநிதியுடன் நடத்தக் கூடிய சிறு தொழிலைத் தொடங்கும் வகையில், அவருக்கு தேவையான ஒரு சிறிய நன்கொடையையும் வழங்கியதாக லிங்கேஸ்வரன் கூறினார். “இது ஒரு மோட்டார் சைக்கிளை வழங்குவது பற்றியது மட்டும் அல்ல. நம்பிக்கையை இழந்த ஒருவருக்குத் திரும்ப நம்பிக்கையை விதைப்பது பற்றியது. ஒருவரின் உள்ளத்தில் கண்ணியம், நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை மீண்டும் ஏற்படுத்துவது பற்றியது,” என்றும் அவர் உருக்கமாக கூறினார்.

மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொண்டு பேசிய ஏகாம்பரம், “முட்டிக்குக் கீழே இரு கால்களையும் இழந்த எனது நிலைமையை கருத்தில் கொண்டு, எனது கோரிக்கையை ஏற்று குறுகிய காலத்திலேயே E-Bike G77 எனும், பாட்டரியில் இயங்கும், 180 கிலோ எடையுடன், சுமார் 50 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய மோட்டார் சைக்கிளை தமது பரிவுமிக்க மனிதநேய சேவையின் வழியாக அன்பளிப்பாக வழங்கிய டாக்டர் லிங்கேஸ்வரனுக்கு எனது நன்றியும் வணக்கமும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தனது தந்தை டத்தோஸ்ரீ ஆர். அருணாசலம் போலவே மிகுந்த மனிதநேயம் கொண்டவர்,” என்று உணர்ச்சி வாய்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here