News By S.Gunalan
ஆயிர் ஈத்தாம்,
பினாங்கு மாநிலத்தின் ஆயிர் ஈத்தாம் பகுதியில் அமைந்துள்ள மூத்த குடிமக்களுக்கான செயல்பாட்டு மையத்திற்கு, பினாங்கு மாநகர மன்ற மேயர் டத்தோ அ. ராஜேந்திரன் நேற்று காலை நேரில் வருகை தந்து ஆய்வு செய்தார். இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும் சமூக நல நடவடிக்கைகள், சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட அம்சங்களை நேரில் பார்வையிடும் நோக்கத்தோடு, இந்தச் சிறப்பு வருகை நிகழ்ந்தது.
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும் மையங்களில் இதுவும் முக்கியமானதாக விளங்குகிறது. இதன் சுற்றுப்புறங்களில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு குறைபாடுகளை தடுக்கும் வகையில், தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மேயர் குறிப்பிட்டார்.

மேலும், மையத்திற்கருகில் நடைபெற்று வரும் மரம் வெட்டும் பணிகள், மூத்த குடிமக்கள் மற்றும் அருகிலுள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாதென்று அவர் வலியுறுத்தினார். இதற்காக பாதுகாப்பு முறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டுமென்று அறிவுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

பினாங்கு மாநகர மன்றத்தால் நிர்வகிக்கப்படும் இந்த மையம், சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. மூத்த குடிமக்கள் இங்கு பங்கேற்கக்கூடிய பயிற்சி, உடற்பயிற்சி, சுயவேலை வாய்ப்புகள், மருத்துவ ஆலோசனை போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூக ஒற்றுமையை வளர்க்கும் முகமாகவும், மூத்த குடிமக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேயரின் இந்த நேரடி ஆய்வு, எதிர்காலத்தில் இத்தகைய மையங்கள் மேலும் பல இடங்களில் உருவாகும் எண்ணத்தை வலுப்படுத்துகிறது. சமூக நலனுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சியில் இதுவும் ஒரு முக்கிய கட்டமாக அமைகிறது.









