News By Dilli Rani Muthu
தெலுக் இந்தான்,
வேப்பிங் மற்றும் மின்னியல்-சிகரெட்டுகளால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் உடனடியாக தேசிய அளவில் தடை விதிக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. “வேப்பால் உயிரிழப்பு அல்லது சிகிச்சைச் செலவுகள் ஏற்படுமானால், அதைத் தடை செய்ய தவறும் மாநில அரசுகளே அதற்குப் பொறுப்பு” என அந்தச் சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் கடுமையாக தெரிவித்துள்ளார்.
சங்கத்தின் வலியுறுத்தலின்படி, வேப்பை பற்றிய சர்வதேச ஆய்வுகள் மற்றும் பல நாடுகளில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடைகள், மலேசியாவும் இனிவேலை பிழையாமல் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகின்றன. எனினும், சில மாநில அரசுகள், வெறும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதும், உற்பத்தியாளர்களுடன் சந்திப்புகள் நடத்துவது போன்ற நடைமுறைகள் நேரத்தை வீணாக்குவது மட்டுமன்றி, இளம் தலைமுறையின் எதிர்காலத்தையே விளையாட்டு ஆக்குவதாக சுப்பாராவ் கடுமையாக சாடினார்.

சமீபத்தில், பஹாங் சுல்தான் அப்துல்லா நாட்டுமுழுவதும் மின்னியல்-சிகரெட்டுகளுக்கு தடை விதிப்பதற்கான முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்திருந்தார். “நாம் மென்மையாக இருக்கக்கூடாது. அது மக்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும்” என அவர் எச்சரித்தார்.
இப்போது பெரும்பாலான வேப் திரவங்களில், நிக்கோடினுடன் சேர்ந்து கஞ்சா, செயற்கை போதைப்பொருட்கள் போன்ற ஆபத்தான கலவைகள் இருப்பது சுலபமாகக் காணப்படுகிறது. இது இளம் பெண்கள் உட்பட பள்ளி மாணவர்களை அறியாமலேயே போதைப்பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றது. மேஜிக் காளான் போன்ற சுவைகளில் கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் சந்தைப்படுத்தப்படும் இந்த தயாரிப்புகள், இளையோரின் ஆர்வத்தை தூண்டுகிறது.
சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுவதாவது, 2017இல் 13-15 வயதுக்குட்பட்ட 2.1 லட்சம் மாணவர்கள் வேப்பிங் பயன்படுத்திய நிலையில், 2022இல் இது 3 லட்சத்திற்கும் அதிகமாகி விட்டது. இது தொடர்ந்து தொடருமானால், 2030க்குள் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக உயரும் என்று சுப்பாராவ் எச்சரித்தார்.
அத்துடன், மாநில அரசுகள் மற்றும் சுகாதார அமைச்சுகள் நேரடி நடவடிக்கை எடுக்க தவறினால், மக்களின் நலனுக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கிடையில், அனைத்து மாநில அரசுகளுக்கும் அதிகாரப்பூர்வ கடிதங்கள் அனுப்பப்பட்டு, வேப்பிங் மற்றும் மின்னியல்-சிகரெட்டுகளுக்கு முழுமையான தடை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தெரிவிக்கப்படுவதாகவும் சுப்பாராவ் தெரிவித்தார்.









