இந்துகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்து சங்கம் பெரும் பங்காற்றுகிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது. 60 ஆண்டு பராம்பரியம் கொண்ட மலேசிய இந்து சங்கத்தின் 48 ஆண்டு பொதுக்கூட்டத்தோடு தேர்தலும் இன்று 20.7.2025 தோட்டமாளிகையில் நடைபெறவிருப்பதாக மறுமலர்ச்சி – மாறுவோம்; மாற்றுவோம் அணியின் சார்பில் தலைமை பொறுப்பிற்கு போட்டியிடும் கணேஷ் பாபு தெரிவித்தார்.
சுமார் 3,000 பேர் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கும் வேளையில் மறுமலர்ச்சி அணிக்கும் வெற்றி அணிக்கும் இடையே போட்டி நடைபெறவிருப்பதாக அவர் தெரிவித்தார். வெற்றி அணியின் சார்பில் நடப்புத் தலைவரான தங்க கணேசனும் மறுமலர்ச்சி அணியின் சார்பில் என்னுடைய அணியை சேர்ந்த 10 பேர் போட்டியிட இருக்கின்றனர்.
நாங்கள் பொறுப்பேற்ற 100 நாட்களில்
1. அவசர ஆண்டுக்கூட்டம் நடத்தி சட்ட திருத்தம் செய்வது
2. அனைத்து மாநிலம், வட்டார, மத்திய நிர்வாகத்தினருக்கும் KPI (முக்கிய செயல்பாட்டுக் குறியீடு) செயல்படுத்தல்
3. அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் திருக்குறள் புத்தகம்
4. ஆயுட்கால உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை
5. மாநில மற்றும் வட்டார நிர்வாகிகளுக்கு சனாதன தர்மம் மற்றும் சமயக் கல்வி பயிற்சி
6. அனைத்து இந்து குடும்பங்களுக்கு இல்ல வழிபாட்டு கையேடு வழங்குதல்
7. ஒவ்வொரு மத்திய செயலை உறுப்பினருக்கும் சமூக சமய பொறுப்பு
8. ஒவ்வொரு சனிக்கிழமையும் “ஆலய மக்கள் சந்திப்பு”
9. அட்சய பாத்திரம் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் ஆகிய 9 கொள்கைகளை நிறைவேற்றுவோம் என வாக்குறுதி அளிக்கிறோம். என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால் தார்மீக பொறுப்பேற்கிறேன் என்றும் கணேஷ் பாபு கூறினார்.
மலேசிய இந்து சங்கத்தின் சட்டத் திட்டங்கள் 2002ஆம் ஆண்டும் 2020ஆம் ஆண்டும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தம் உறுப்பினர்களின் உரிமையை மத்திய செயலவை உறுப்பினர்களின் கைக்கு சென்று விட்டது எனலாம். அதனை மீண்டும் உறுப்பினர்களுக்கே வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும் என்றார் அவர்.
இந்து சங்கத்தில் தற்போது 79,000 தனி நபர்களும், 2,367 ஆலயங்களும் உறுப்பினராக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.









