இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்,அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளை தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஏற்கனவே, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை, வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்த டிரம்ப், ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தார்.

இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். நாளையுடன் (வியாழக்கிழமை) இதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், இன்று புதிய வரிவிதிப்பு முறையை அறிவித்து வெள்ளிக்கிழமை முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறிஇருப்பதாவது:-இந்தியா நண்பனாக இருந்தாலும், பல ஆண்டுகளாக ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தையே செய்து வருகிறோம். ஏனெனில் இந்தியாவின் வரிகள் மிக அதிகமாக உள்ளன. அது உலகிலேயே மிக அதிக வரிவிதிப்பாகவும் உள்ளது.

மேலும் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியா கடுமையான பணமற்ற வர்த்தக தடைகளை கொண்டுள்ளது. இந்தியா எப்போதும் தங்கள் ராணுவ உபகரணங்களில் பெரும் பகுதியை ரஷியாவில் இருந்தே வாங்கி வருகிறது. ரஷியாவிடம் இணக்கமாக இருந்து மிகப்பெரிய எரிசக்தி வாங்குபவராகவும் உள்ளது. இவை எல்லாம் நல்லதல்ல. எனவே ஆகஸ்டு 1-ந்தேதி முதல் இந்தியா 25 சதவீத வரியை செலுத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here