மலேசியாவிலும் உலகளவிலும் கல்வியாளராக அறியப்படும் பேராசிரியர் டத்தோஶ்ரீ டாக்டர் ஜைனி உஜாங் அவர்களின் தலைமையில் நடைபெற்ற “100 நாட்கள் உலக விரிவுரை பயணம்” என்ற Global Dialogue Series நிகழ்ச்சி அறிவியல் மேலாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் MSU நிறுவனரும் தலைவருமான பேராசிரியர் டான்ஶ்ரீ டத்தோ’ வீரா டாக்டர் முகமட் ஷுக்ரி அப்துல் யாஜித், துணைவேந்தர் பேராசிரியர் புவான் ஸ்ரீ டத்தோ டாக்டர் ஜுனைனா அப்துல் ஹமீட், பல்கலைக்கழக மூத்த நிர்வாகத்தினர், பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஏப்ரல் முதல் ஜூலை 2025 வரையிலான காலப்பகுதியில், டாக்டர் ஜைனி 15 நாடுகளில் பயணம் செய்து விரிவுரைகள், கலந்துரையாடல்கள், ஊடகவியலாளர் சந்திப்புகள் உள்ளிட்ட தள பார்வைகள் ஆகியவற்றின் மூலம் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அந்த நாடுகளில் கத்தார், சவூதி அரேபியா, துருக்கி, ஸ்வீடன், நார்வே, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா அடங்கும்.
இந்த பயணத்தின் முக்கிய கருப்பொருள்கள்:
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை
பெருந்தொற்று காலத்திற்கு பிந்தைய உயர் கல்வி
2050ற்கு முன் காலநிலை நடவடிக்கைகள்
உலக சுகாதாரத்திற்கான தலைமையியல்
இந்த பயணம், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நாடு முழுவதும் அரசுத் துறைகள், தனியார் துறைகள், தன்னார்வ அமைப்புகளுடன் நடக்கும் சீரான கலந்துரையாடல்களுடனும் தொடர்கிறது. எம்எஸ்யுவில் இந்த விரிவுரை நிகழ்ச்சி நடைபெறுவதன் மூலம் அதன் சமூகத்திற்கு, கல்வி, சக்தி, சுற்றுச்சூழல், சுகாதார துறைகளில் பேராசிரியர் ஜைனி உஜாங் அவர்களின் பயண அனுபவங்களை அறிந்துகொள்வதற்கான அரிய வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில், பேராசிரியர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஜைனி உஜாங் அவர்கள் MSU-வின் இரண்டாவது துணை வேந்தராகவும், அதே சமயம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.
MSU ஒரு உலகளாவிய தரப்படுத்தப்பட்ட உயர்கல்வி நிறுவனம் ஆகும். இது QS (Quacquarelli Symonds) மற்றும் Times Higher Education (THE) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிலைத்த எதிர்காலத்தை நோக்கி, 21ஆம் நூற்றாண்டுக்கேற்ப கல்வியை முன்னிலைப்படுத்தி, சமநிலையுள்ள, திறமைமிக்க மற்றும் பல்துறைத்திறன் கொண்ட பட்டதாரிகளை உருவாக்குவதே MSU இன் நோக்கமாகும்.










