சத்தீஸ்கரில் பெய்த கனமழை: வெள்ளத்தில் சிக்கிய தமிழர்.. குடும்பத்துடன் பலியான சோகம்

ராணிப்பேட்டை ராய்ப்பூர்,சத்தீஸ்கரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு பஸ்தார், பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து பல நதிகள் நிரம்பி வழிந்து, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து அங்கு பாதிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்த சூழலில் பஸ்தார் மாவட்டத்தில் கங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய கால்வாயை ஒரு கார் கடக்க முயன்றது. அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் அந்த தம்பதியினர், இரண்டு மகள்களுடன் இறந்தனர்.

விசாரணையில் அந்த காரில் பயணித்தது தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்து உள்ளது. இறந்தவர்கள் ராஜேஷ்குமார் (வயது 43), அவரது மனைவி பவித்ரா(40), அவர்களது 2 மகள்கள் சவுஜன்யா (7) மற்றும் சவுமியா (4) என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

ராஜேஷ்குமார், ராய்ப்பூரில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார். அவர் குடும்பத்தினருடன் பஸ்தாருக்கு காரில் சுற்றுலா சென்றிருந்தார். நேற்று முன்தினம் கால்வாயில் வெள்ளத்தை கடக்க முயன்றபோது அவர்களது காரை வெள்ளம் இழுத்துச்சென்றது. அன்று மாலையில் கால்வாயில் நீர்மட்டம் குறைந்தபிறகு 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கு பிரேத பரிசோதனை முடிந்து இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு 4 பேரின் உடல்களை எடுத்து வரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளம் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here