மெர்சிங்,
முன்னேற்றமான தேசத்தின் வளர்ச்சி மனிதாபிமான பண்புகளான ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் கருணை ஆகியவற்றின் மீது அமைய வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். பொருளாதார முன்னேற்றம், டிஜிட்டல் தொழில்நுட்பம் அல்லது செயற்கை நுண்ணறிவு மட்டுமே ஒரு நாட்டின் வெற்றியின் அளவுகோலாக இருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
அறிவிலும் கல்வித் திறனிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம், திறமையிலும் பெருமை கொள்கிறோம். ஆனால் மனித கண்ணியத்தை வளர்ப்பதில்தான் நாம் இன்னும் பெருமை கொள்ள வேண்டும்,” என பிரதமர் இன்று (செப்டம்பர் 13) பந்தாய் தஞ்சோங் லெமான், மெர்சிங்கில் நடைபெற்ற 27வது ஜோகூர் ஸ்கவுட்ஸ் பொது மாநாட்டை (PAPJ27) திறந்து வைத்து உரையாற்றினார்.
மனிதாபிமான பண்புகள் இயந்திரங்கள் அல்லது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட முடியாது என்றும், அது கட்டுப்பாடு, திறமைகள் மற்றும் சகோதரத்துவம் போன்ற பண்புகளின் மூலம் வாழ்க்கையில் விதைக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இயந்திரங்களால் மட்டுமே மனிதரை ஆளுமைப்படுத்த முடியாது; ஒழுக்கம், கட்டுப்பாடு, கருணை மற்றும் பல்வேறு இன-மத மக்களிடையே நட்பு ஆகியவற்றின் மூலம் தான் மனிதர் உருவாகிறார்,” என அன்வர் தெரிவித்தார்.
பள்ளிகளில் நடைபெறும் பகிடிவதை போன்ற சமூகச் சிக்கல்கல்கள் உண்மையான மனிதாபிமான பண்புகளுக்கு எதிரானது என அவர் வலியுறுத்தினார். மேலும், ஸ்கவுட்ஸ் மலேசியாவின் முகாம்திட்ட வெற்றிக்காக வெ.100,000 ஒதுக்கீட்டை அறிவித்தார். சிங்கப்பூர், இந்தோனேசியா, ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் உள்ள நடப்புறவை அவர் பாராட்டி, நாடுகடந்த நட்பின் சான்றாக அதை விவரித்தார். PAPJ27 மாநாடு செப்டம்பர் 17 வரை நடைபெற உள்ளது; 4,000க்கும் மேற்பட்ட ஸ்கவுட்ஸ்களை ஒன்று சேர்த்து ஒற்றுமை மற்றும் நட்பை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் .





















