கோலாலம்பூர்,
PTPTN எனப்படும் தேசிய உயர் கல்வி அறவாரியத்தில் கடன் பெற்ற முதல் வகுப்பு இளங்கலை பட்டதாரிகள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு விலக்கு அளிக்கப்படும் கொள்கை வாபஸ் பெறப்படவில்லை. மாறாக, அது தொடர்ந்து அமலில் இருக்கிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிசா அப்துல் ரஹிம் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டிலிருந்து PTPTNனில் கடன் பெற்ற பட்டதாரிகளுக்கு இந்தச் சலுகை அமலில் இருந்து வருகிறது. மலேசிய கல்வியமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்விக்கூடங்களில் முதல் வகுப்பு இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுகிறது. அவர்களின் பொருளாதார அந்தஸ்து, இனம், சமயம் பின்னணிகளைக் கணக்கில் கொள்ளாமல் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.
இந்தச் சலுகையைப் பெறுவதற்கு வழங்கப்பட்டிருக்கும் மேலும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அனைத்து நிபந்தனைகளையும் பட்டதாரிகள் நிறைவு செய்திருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை அவர்கள் ஆன் லைன் செயலி மூலம் அல்லது myPTPTN di pautan: https:// myptptn.ptptn.gov.my என்ற அகப்பக்கத்தின் வாயிலாகவும் சமர்ப்பிக்கலாம். கடனைத் திருப்பிச் செலுத்துவதில் அளிக்கப்பட்டிருக்கும் விலக்கிற்கு செய்யப்படும் விண்ணப்பங்கள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும் ஆக்கப்பூர்வமாகவும் சமச்சீராகவும் பரிசீலிக்கப்படுவதை உறுதிசெய்யும் கடப்பாட்டில் PTPTN எப்போதும் மிகத் தெளிவாக இருக்கிறது.
நாட்டின் உயர் கல்வி விருப்பங்களுக்கு ஆதரவாக கடன் பெற்ற மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் கடமையும் பொறுப்பும் தங்களுக்கு உண்டு என்று டத்தோஸ்ரீ நோர்லிசா தெரிவித்தார். இதன் அடிப்படையில் இந்த விவகாரத்தை அரசியலாக்கி குளிர் காய வேண்டாம் என்று PTPTN கேட்டுக்கொள்கிறது என்றார் அவர்.
நடைமுறையில் உள்ள கொள்கைகளை மதித்து சிறந்த தேர்ச்சி பெறும் பட்டதாரிகளுக்கு நேரடியாக நன்மை பயக்கும் இதுபோன்ற திட்டத்தை வரவேற்க வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், கல்வியில் அரசியல் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.




















