நாட்டின் அமைதியையும் பல்லின மக்கள் வாழ்ந்து வரும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க முயலும் எந்தவொரு சக்தியையும் அனுமதிக்கப் போவதில்லை என மடானி அரசாங்கத்தின் இந்தியத் தலைவர்கள் மிகத் தெளிவான அதிரடி நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். சமீபகாலமாக உருவெடுத்து வரும் இனவாதப் பதற்றங்களுக்கு எதிராக, கட்சி எல்லைகளைக் கடந்து இந்தியத் தலைவர்கள் காட்டியுள்ள ஒற்றுமை, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் ஒரு தகர்க்க முடியாத அரணாக உருவெடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ, பிரதமர் துறை (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) துணை அமைச்சர் எம். குலசேகரன், தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் ஆகியோர் மிகத் துணிச்சலான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இனவாத உணர்வுகளைத் தூண்டி நாட்டின் அமைதியைக் குலைக்கும் நபர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி, மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.எஸ்.என் ராயர் (ஜெலுத்தோங்), வி. கணபதிராவ் (கிள்ளான்) மற்றும் பல்வேறு மாநிலங்களின் மக்கள் பிரதிநிதிகளும் இந்த அறப்போரில் ஓரணியில் திரண்டுள்ளனர்.
இவர்களின் கூட்டுக்குரல், மலேசியாவின் பன்முகத்தன்மையைக் காப்பதில் இந்தியத் தலைவர்களின் அரசியல் முதிர்ச்சியையும், நாட்டின் ஸ்திரத்தன்மை மீதான அவர்களின் சமரசமற்ற அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகிறது. இதன் தொடர்ச்சியாக, சம்ரி வினோத், தமீம் டாஹ்ரி போன்ற நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள், அரசாங்கத்தின் எச்சரிக்கை வெறும் வெற்றுப் பேச்சல்ல என்பதை நிரூபித்துள்ளன. நாட்டின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் எவருக்கும் எதிராக அரசு இரும்புக்கரம் கொண்டு செயல்படும் என்பதற்கு இது ஒரு நேரடிச் சான்றாகும்.
அதேவேளையில், நில ஆவணங்கள் இல்லாத இந்து ஆலயங்கள் தொடர்பான விவகாரத்தை ஒரு தரப்பினர் அரசியல் ஆதாயத்திற்காகத் திசைதிருப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக முந்தைய நிர்வாகங்களால் தீர்க்கப்படாமல் விடப்பட்ட இந்தப் பிரச்சனைக்கு, தற்போதைய மடானி அரசாங்கத்தின் மீது பழியைச் சுமத்துவது முற்றிலும் முறையற்றது. சட்ட ரீதியாகவும், மத உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் இந்தப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வுகாண அரசு தீர்க்கமான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது.
மலேசியாவின் பலமே அதன் பன்முகத்தன்மையில் தான் உள்ளது. சகிப்புத்தன்மை – பரஸ்பர மரியாதையின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட இந்த அமைதியைச் சிதைக்க முயலும் எந்தவொரு முயற்சியும் முறியடிக்கப்பட வேண்டும். மடானி அரசின் இந்தியத் தலைவர்களின் இந்தத் திடமான ஒற்றுமை, மலேசியா ஒரு பாதுகாப்பான மற்றும் அமைதியான நாடாகத் திகழ்வதை உறுதி செய்வதற்கான மிக முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.









