‘ஒப்ஸ் டிரக்ஸ் ஜிஹாத்’ நடவடிக்கையில் நாளொன்றுக்கு 60 போதைப்பொருள் பழக்கமுள்ளவர்களை கைது செய்ய இலக்கு – கிளந்தான் போலீஸ்

கோத்தா பாரு,

கிளந்தான் மாநிலத்தில் குற்றச்செயல்கள் குறைய வேண்டும் என்பதற்காக, ‘ஒப்ஸ் டிரக்ஸ் ஜிஹாத்’ என்ற நடவடிக்கையின் கீழ் தினமும் குறைந்தபட்சம் 60 போதைப்பொருள் பழக்கமுள்ளவர்களை கைது செய்வதை கிளந்தான் போலீசார் இலக்காக வைத்துள்ளனர்.

சொத்து மற்றும் குற்றச்செயல்களில், குறிப்பாக சிறிய திருட்டுகள் மற்றும் வீடுகளை உடைத்து திருடும் சம்பவங்களில், போதைப்பொருள் அடிமைகள்தான் முக்கிய குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசுப் மமாத் தெரிவித்துள்ளார்.

இதற்காக, மாநில போதைப்பொருள் குற்றப்புலனாய்வு துறையின் தலைவருக்கு தினசரி போதைப்பொருள் பழக்கமுள்ளவர்களை கைது செய்ய, தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“எளிமையாகச் சொன்னால், கிளந்தான் மட்டுமல்ல, எங்கும் போதைப்பொருள் குற்றச்செயல்களுடன், குறிப்பாக சொத்து குற்றங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளன. ‘டிரக்ஸ் ஜிஹாத்’ நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டால், இந்தக் குற்ற விகிதத்தை குறைக்க முடியும் என காவல்துறை நம்புகிறது..

போதைப்பொருள் அடிமைகள்தான் பெரும்பாலான சொத்து குற்றங்களுக்குப் பொறுப்பாக உள்ளனர். ஆயுதத்துடன் செய்யப்படும் கொள்ளை போன்ற வன்முறை குற்றங்களைத் தடுப்பது சிரமமாக இருந்தாலும், சொத்து குறித்த குற்றங்களில் இதை கட்டுப்படுத்த முடியும்,” என்று கிளந்தான் மாநில காவல்துறையின் செப்டம்பர் மாத மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசினார்.

அவரது தகவல்படி, சொத்து குற்றச்செயல் புள்ளிவிவரம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 26.6 சதவீதம் குறைந்துள்ளது. எனினும், போலீசார் தங்கள் பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்ற தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here