பேங்காக்:
கம்போடியாவுடனான எல்லைப் பகுதியில் 10 கிலோமீட்டர் நீளமுடைய புதிய பாதுகாப்பு வேலியை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தாய்லாந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் நட்டாஃபோன் நர்க்ஃபனிட் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்திற்கான முதலீடு “ஹத்தாய் திப் நிதி (Hathai Thip Fund)” மூலம் ஏற்பாடு செய்யப்படும். இந்நிதி, தாய்லாந்து இளவரசி சுலாபோர்ன் குரோம் ஃபிரா ஸ்ரீசவங்கவதனாவின் ஒரு மில்லியன் பாட்ட் (சுமார் 40,130 அமெரிக்க டாலர்) நன்கொடை மூலம் தொடங்கப்படுகிறது.
அமைச்சர் கூறியதாவது, புதிய வேலி சா கயோ மாநிலத்தில் அமைக்கப்படும். இதற்கான செலவு சுமார் 87 மில்லியன் பாட்டாக கணிக்கப்பட்டுள்ளது.
எல்லை வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே இந்த வேலிகள் அமைக்கப்படும் என்றும், பணிகளை தாய்லாந்து ஆயுதப்படைகள் தலைமையகம் மேற்பார்வை செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போதுமான அரசாங்க நிதி இல்லாததால், கூடுதல் தொகை ஒதுக்கீடு குறித்து இன்னும் விவாதம் நடைபெற்று வருகிறது. எனினும், நிதி உறுதி செய்யப்பட்டவுடன் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.





















