குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) மனிதாபிமானப் பணியில் பங்கேற்ற 23 மலேசிய மாவீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் திரும்பி வந்ததைக் கொண்டாட மடானி அரசாங்கம் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இந்த நிகழ்வு பாலஸ்தீன மக்களுடனான மலேசியர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் உதவும் என்று அவர் கூறினார்.
இறைவன் நாடினால், அவர்கள் கோலாலம்பூருக்கு வருவதை நான் எதிர்நோக்குகிறேன். இரவில் அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு கூட்டத்தை நடத்தும் வகையில் நேரத்தை சரிசெய்ய முயற்சிப்போம் – அதுவும் நன்றாக இருக்கும் என்று அவர் துருக்கியின் இஸ்தான்புல்லில் மலேசியக் குழுவுடனான தனது உரையாடலின் பதிவோடு ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.
வியாழக்கிழமை, ஜிஎஸ்எஃப் பணியில் பங்கேற்ற 23 மலேசிய ஆர்வலர்களும் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் இஸ்ரேலின் அஷ்டோட் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டு, மலேசிய நேரப்படி நேற்று மாலை 6.45 மணிக்கு இஸ்ரேலில் உள்ள ரமோன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, சுமார் 2 மணி நேரம் கழித்து இஸ்தான்புல்லை அடைந்தனர்.
சுமுத் நுசாந்தரா கட்டளை மையத்தின் (SNCC) இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் சானி அரபி அப்துல் அலிம் அரபி, அனைத்து மலேசிய பிரதிநிதிகளும் திங்கள்கிழமை (அக்டோபர் 6) வீடு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறியதாகக் கூறப்படுகிறது. சுமுத் நுசாந்தராவின் புரவலரான அன்வார், சம்பந்தப்பட்ட அனைத்து மலேசியர்களும் நல்ல நிலையில் இருப்பதாகவும், மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாகவும் கூறினார்.
உரையாடலில், தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாகும் காசா மக்களைப் பாதுகாப்பதில் அவர்களின் தைரியம், விடாமுயற்சி மற்றும் தியாகத்திற்கும் அன்வர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். எல்லைகளுக்கு அப்பால் மனிதாபிமான விழுமியங்களை நிலைநிறுத்தும் மலேசியர்களின் தைரியத்தை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்று அவர் கூறினார்.










