லாகூர்,பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டி வருகிறது.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்குமுன் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலர் உயிரிழந்தனர். பின்னர், கத்தாரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சண்டையை நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
இந்நிலையில், பாகிஸ்தானில் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டம் கொட் லாலு பகுதியில் அரசு எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வந்தனர். அந்த பாதுகாப்புப்படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.